உள்ளடக்கத்துக்குச் செல்

பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் டி. கே. இராமமூர்த்தி காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஏப்பிரல் 18, 2013

தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் இசையமைப்பாளரான டி. கே. ராமமூர்த்தி நேற்று முன்தினம் (செவ்வாய்) நள்ளிரவு சென்னையில் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 91. உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மூச்சுத் திணறல் மற்றும் மாரடைப்பு காரணமாக காலமானார்.


படிமம்:Ramamurthy.jpg
டி. கே. ராமமூர்த்தி

தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட 40 விருதுகளைப் பெற்றுள்ள இராமமூர்த்தி, எம். எஸ். விஸ்வநாதனுடன் இணைந்து சுமார் 86 திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.


திருச்சிராப்பள்ளியில் 1922ஆம் ஆண்டு பிறந்தவர் டி. கே. இராமமூர்த்தி; தலைமுறைப் பெருமைவாய்ந்த இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை கிருஷ்ணசாமியும், தாத்தா மலைக்கோட்டை கோவிந்தசாமியும் வயலின் கலைஞர்களாவர். இதனால் ராமமூர்த்தியும் சிறுவயதில் வயலின் வாசிப்பில் சிறந்து விளங்கினார்.


திரையுலகில் ஆரம்பத்தில் சிறுசிறு வேடங்களில் நடித்தும், வயலின் தனியிசை நிகழ்ச்சி நடத்தியும் வந்தார். இசையமைப்பாளர் சி. ஆர். சுப்பராமன் இவரை தன்னோடு சேர்த்துக் கொண்டார். அதன்பிறகு இராமமூர்த்தியுடன் எம். எஸ். விஸ்வநாதனும் சேர்ந்து கொண்டார். ‘மெல்லிசை மன்னர்கள்’ எனும் சிறப்புப் பெயரினால் அழைக்கப்பட்ட இவ்விருவரும் 1952ஆம் ஆண்டு முதல் 1965ஆம் ஆண்டு வரை இணைந்து இசையமைத்தனர். ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்திற்குப் பிறகு கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்தனர்.


1995ஆம் ஆண்டில் டி. கே. இராமமூர்த்தியும் எம். எஸ். விஸ்வநாதனும் மீண்டும் இணைந்து ‘இலக்கியச் சோலை’ எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தனர். 2012ஆம் ஆண்டு ‘ஜெயா டிவி’ நடத்திய பாராட்டு விழாவில் இருவருக்கும் தனித்தனியே ‘திரையிசைச் சக்ரவர்த்தி’ எனும் பட்டத்தினை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.


மறைந்த கலைஞர் டி. கே. இராமமூர்த்திக்கு இசையமைப்பாளர்கள் எம். எஸ். விஸ்வநாதன், (சங்கர்) கணேஷ், தேவா, பாடகர்கள் பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன் மற்றும் கவிஞர் வாலி போன்றோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதல்வர் ஜெயலலிதாவும், திமுக தலைவர் கருணாநிதியும் இரங்கல் செய்தியினை வெளியிட்டுள்ளனர். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இன்று காலை சென்னை மயிலாப்பூர் மின்மயானத்தில் நடந்தது.மூலம்[தொகு]