உள்ளடக்கத்துக்குச் செல்

பழம் பெரும் நடிகர் 'என்னத்தெ' கண்ணையா காலமானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஆகத்து 8, 2012

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் 'என்னத்தெ' கன்னையா நேற்று செவ்வாய்க்கிழமை தனது 87வது அகவையில் சென்னையில் காலமானார்.


கடந்த ஒரு மாதகாலமாக உடல்நலக்குறைவா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு இரு‌ந்த கன்னையா, நேற்று மாலை ‌திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள த‌னியா‌ர் மரு‌த்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மரணமானார்.


மதுரையைப் பிறப்பிட்ரமாகக் கொண்ட கன்னையா சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்தார். மனைவி ராஜம் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்‌களுக்‌கு அசோ‌கன்‌, சா‌ய்‌கணே‌ஷ்‌ என இரு மகன்‌களும்‌, அமுதா‌, தனலட்‌சுமி‌, மகே‌ஸ்‌வரி‌, சண்‌முகப்‌பி‌ரி‌யா‌ என நா‌ன்‌கு மகள்களும்‌ உள்‌ளனர். இவரது இறுதிச் சடங்கு இன்று மாலை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மின் மயானத்தில் நடைபெறுகிறது.


டி.கே.சண்முகம், எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரது நாடகக் குழுக்களில் இணைந்து 1942-ல் கலைத்துறைக்கு அறிமுகமான கன்னையா 1950-ல் "ஏழை படும்பாடு' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். "நான்' திரைப்படத்தில் கண்ணையா பேசிய "என்னத்த' என்ற வசனத்தின் மூலம் "என்னத்த' கன்னையா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். ”தொட்டால் பூ மலரும்' என்ற திரைப்படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த "வரும்.... ஆனால் வராது.....' என்ற நகைச்சுவை காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.


எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, தனுஷ் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஏழைபடும் பாடு, நம்நாடு, பாசம், முதலாளி, சொர்க்கம், நான், மூன்றெழுத்து, இதயவீணை, தொட்டால் பூ மலரும், ம‌ன்ன‌‌ன் உட்பட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவ‌ர் எ‌ன்ன‌த்த க‌ன்னையா. தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.


மூலம்