பாக்கித்தானின் புதிய பிரதமராக ராஜா அஷ்ரப் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூன் 23, 2012

பாக்கித்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராசா கிலானி உச்சநீதிமன்றத்தால் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து ஆளும் மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜா பர்வேசு அஷ்ரப் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


342 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அஷ்ரப்பிற்கு ஆதரவாக 211 வாக்குகள் கிடைத்தன. இவருக்கு எதிராகப் போட்டியிட்ட சர்தார் மெகுதாப் அகமது கான் அப்பாசி 89 வாக்குகளைப் பெற்றார். சனாதிபதியின் விருப்பத்தேர்வு வேட்பாளர் மக்தூம் சகாபுத்தீனைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடைசி நிமிடத்தில் அஷ்ரபின் பெயர் பிரேரிக்கப்பட்டது.


பொதுத்தேர்தல்கள் அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் அஷ்ரப்பின் பதவிக்காலம் மிகவும் குறுகியதாகவே இருக்கும் என அவதானிகள் கருதுகின்றனர். 1950 ஆம் ஆண்டில் பிறந்த அஷ்ரப் 198 ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் நுழைந்தார். 2008 ஆண்டு முதல் நீர் மற்றும் மின்வலுத்துறை அமைச்சராகவும், தகவற்தொழிநுட்ப அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்து வருகிறார்.


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து யூசுப் ரசா கிலானி மூன்று நாட்களுக்கு முன்னர் பதவியில் இருந்து விலகினார். இன்றிரவு புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி ஆஷிப் அலி ஸர்தாரி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளனர்.


பிரதமராக தெரிவு செய்யப்பட்டபின்னர் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதாக உறுதியளித்த ராஜா பர்வேசு அஷ்ரப் மக்களாட்சிச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சியினரின் ஆதரவைக் கோரினார்.


மூலம்[தொகு]