உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்கித்தானில் பேருந்து விபத்தில் 37 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், செப்டெம்பர் 28, 2011

பாக்கித்தானில் மலைப்பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தினால் 37 பள்ளிச் சிறுவர்கள் உட்படக் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


பாக்கித்தானின் லாகூர் அருகே பாசிலாபாத் நகரில் அமைந்துள்ள பள்ளியொன்றின் மாணவர்கள் காலார்கார் பகுதிக்கு சுற்றுலா சென்றபோதே அவர்கள் சென்ற பேருந்து மலைப்பாங்கான சாவல்நகர் அருகே சென்றுகொண்டிருந்த போது பள்ளத்தில் வீழ்ந்தது. தலைநகர் இசுலாமாபாதில் இருந்து தென்கிழக்கே 160 கிமீ தொலைவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


இறந்த பள்ளிச் சிறுவர்கள் 12 இற்கும் 14 இற்கும் இடைப்பட்ட வயதினராவார். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள ராவல்பிண்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.


அளவுக்கு அதிகமான மாணவர்களை ‌பேருந்தில் பயணம் செய்ய அனுமதி வழங்‌கியமை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இந்த விபத்துக் குறித்து அருகில் இருந்த கிராம மக்கள் கூறு‌கையில், அதிகளவிலான கூட்டம் மற்றும் ‌போதிய வெளிச்சம் இன்மையாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். அதேசமயம் விசாரணை அதிகாரிகள் பஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.


கடந்த சூன் மாதத்தில், பாக்கித்தானின் காசுமீர் பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஏரியொன்றில் கவிந்து விபத்துக்குள்ளானதில் 12 சிறுவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். சென்ற ஆண்டு சனவரியில் பள்ளிச் சிறுவர்கள் சென்ற பேருந்து தொடருந்து ஒன்றுடன் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]