உள்ளடக்கத்துக்குச் செல்

பாலி ஒன்பது போதைக் குழுத் தலைவருக்கு மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 17, 2011

இந்தோனேசியாவுக்கு போதைப் பொருள் கடத்திய பாலி ஒன்பது என்ற அழைக்கப்படும் ஒன்பது பேரடங்கிய ஆத்திரேலியக் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ சான் என்பவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனையை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.


2005 ஆம் ஆண்டில் எட்டு கிலோகிராம் போதைப் பொருளை பாலிக்குக் கடத்த உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆண்ட்ரூ சான் மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோரின் குற்றம் உறுதி செய்யப்பட்டு இருவருக்கும் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. இப்போது ஆண்ட்ரூ சானின் கடைசி மேன்முறையீடை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.


இப்போது தனது மரணதண்டனையை நிறுத்துமாறு சான் கடைசித் தடவையாக இந்தோனேசிய அரசுத்தலைவர் சுசீலோ யுதயோனோவுக்கு விண்ணப்பிக்கலாம்.


சானுக்கு அறிவிக்கப்பட்ட இம்முடிவினால் மயூரன் சுகுமாரனுக்கும் பாதகமான முடிவே தரப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக ஆத்திரேலியாவின் ஏபிசி வானொலி கூறியுள்ளது.


கடந்த ஆண்டு ஆகத்து மாதத்தில் சான் மற்றும் மயூரன் இருவரும் உச்சநீதிமன்றத்திற்கு மேன்முறையீடு செய்திருந்தனர். தமது பழைய வாழ்க்கையை அவர்கள் மாற்றிக் கொண்டு விட்டதாகவும், சமூகத்துக்குத் தொண்டாற்றத் தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தமது வாதத்தில் எடுத்துரைத்தனர்.


சான், சுகுமாரன் இருவரும் தற்போது பாலியின் கெரபோக்கான் சிறைச்சாலையில் தமது சக கைதிகளுக்கு அடிப்படைக் கல்வி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். 26 வயதான சான் சிறையில் இருந்தவாறு தற்போது இறையியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.


ஆத்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கெவின் ரட்டின் பேச்சாளர் இன்றைய தீர்ப்புக் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "சானுக்கு மன்னிப்பு வழங்குமாறு தமது நாடு இந்தோனேசிய அரசுத்தலைவரைக் கேட்டுக் கொள்ளும்," எனத் தெரிவித்தார்.


பாலி ஒன்பதின் இன்னும் ஒரு உறுப்பினரான ஸ்கொட் ரஷ் என்பவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை கடந்த மே மாதத்தில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மேலும் ஐவர், மார்ட்டின் ஸ்டீவன்ஸ், மாத்தியூ நோர்மன், மைக்கல் சுகாஜ், சீ சென், டான் நியூவென் ஆகியோர் ஏற்கனவே ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டன. ரினாய் லோரன்ஸ் என்ற பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை 20 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]