பாலியில் மரணதண்டனையை எதிர்நோக்கும் மயூரனின் கடைசி மேன்முறையீடு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்தெம்பர் 25, 2010


பாலி ஒன்பது முக்கிய குற்றவாளிகளான ஆண்ட்ரூ சான், மற்றும் மயூரன் சுகுமாரன் ஆகியோர் தமது இரண்டாவது வாழ்வை ஆரம்பிக்க உதவுமாறு இந்தோனேசிய நீதிமன்றம் ஒன்றில் கடைசித் தடவையாக வாதாடினார்கள்.


சுட்டுக் கொல்லப்படும் முறையிலான மரணதண்டனையை எதிர்நோக்கும் சிட்னியைச் சேர்ந்த இவ்விருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தின் முன்னால் கடைசித்தடைவையாகத் தோன்றி தம்மை மன்னிக்குமாறு வேண்டினர். இவர்கள் எட்டு கிலோகிராம் அளவு போதைப்பொருளை சிட்னியில் இருந்து பாலிக்குக் கடத்தியதாக 2005, ஏப்பிரல் 15 இல் பாலியில் கைது செய்யப்பட்டனர்.


மூன்று நீதிபதிகள் முன்னிலையில் நீதிமன்றத்தை மதிக்கும் வகையில் இந்தோனேசிய மொழியில் அவர்கள் உரையாற்றினார்கள். தமது பழைய வாழ்க்கையை அவர்கள் மாற்றிக் கொண்டு விட்டதாகவும், சமூகத்துக்குத் தொண்டாற்றத் தாம் விருப்பம் கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


தனது செய்கைக்காகத் தான் "உண்மையாக, ஆழமாக வருந்துவதாக" லண்டனில் பிறந்த அவுஸ்திரேலிய இலங்கைத் தமிழரான 29 வயதான சுகுமாரன் தெரிவித்தார். சுயநலத்துடன் தாம் வாழ விரும்பவில்லை என்றும், பொதுவான வாழ்க்கை வாழ விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். "கைது செய்யப்படுவதற்கு முன்னர் தான் எவ்வாறு சிந்தனையற்றவனாக, ஞானமற்றவனாக இருந்தேன் என்பது இப்போது எனக்கு விளங்குகிறது," என அவர் தெரிவித்தார். “முன்னர் இந்த போதைப்பொருள் கடத்தல் எப்படி சமூகத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எனபது தனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதன் பின்விளைவுகளைப் பற்றி நான் யோசித்திருக்கவில்லை. என்னுடைய மனதின் அடித்தளத்தில் இருந்து சொல்கிறேன், நான் இப்போது வித்தியாசமானதொரு மனிதன். சீர்திருத்தப்பட்ட ஒருவன்."


சான், சுகுமாரன் இருவரும் பாலி கெரபோக்கன் சிறைச்சாலையில் தமது சக கைதிகளுக்கு அடிப்படைக் கல்வி வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.


இவர்கள் இருவரும் சிறைச்சாலையில் வெற்றிகரமாக புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளார்கள் என்ற அடிப்படையிலேயே மேன்முறையீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த மேன்முறையீடு வெற்றியளிக்கும் பட்சத்தில் இவர்களது தண்டனை 20 ஆண்டுகளாகக் குறைக்கப்படலாம். வெற்றியளிக்காத நிலையில் இந்தோனேசிய அரசுத்தலைவரின் மன்னிப்புக்காக வேண்டலாம்.


சான், மயூரன் சுகுமாரன் இருவரும் மேலும் ஏழு ஆஸ்திரேலியர்களுடன் பாலியில் கைதானார்கள். ஸ்கொட் ரஷ் என்பவரும் மரணதண்டனையை எதிர்நோக்குகிறார். ஏனைய ஐவரும் ஆயுள் தண்டனை பெற்றனர். ரெனே லோரன்சு என்ற பெண் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.


சான், சுகுமாரன் இருவரினதும் மேன்முறையீடு அக்டோபர் 8 ஆம் நாள் மீண்டும் விசாரணைக்கு வரும்.

மூலம்[தொகு]