உள்ளடக்கத்துக்குச் செல்

பிரபல இந்தித் திரைப்பட நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் காலமானார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், திசம்பர் 5, 2011

இந்திப்பட உலகின் காதல் மன்னன் என அழைக்கப்பட்ட நடிகர் தேவ் ஆனந்த் சனிக்கிழமை தனது 88வது அகவையில் லண்டனில் மாரடைப்பால் காலமானார். தேவ் ஆனந்த் சில நாட்களாகவே உடல் நலம் இல்லாமல் இருந்து வந்தார். மருத்துவ பரிசோதனைக்காக சமீபத்தில் லண்டன் சென்றார். அவருடன் மகன் சுனில் மற்றும் குடும்பத்தினர் சென்றிருந்தனர்.


தேவ் ஆனந்த்

1923-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி பஞ்சாபில் குருதாஸ்பூர் என்ற ஊரில் பிறந்த தேவ் ஆனந்த், பாகித்தானில் உள்ள லாகூரில் அரசு கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். 1940-ம் ஆண்டு அவர் மும்பைக்கு குடிபெயர்ந்தார். 1946ம் ஆண்டு தனது 23வது வயதில் 'ஹம் ஏக் ஹெய்ன்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். பின்னர் 1947 ம் ஆண்டு வெளியான சித்தி படம் அவரை சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது. அதன்பிறகு அவர் நடித்த எல்லா படங்களும் பெரும் வெற்றி பெற்றன. அவரது கைடு, பாசி, நகைத் திருடன், சிஐடி, ஜானி மேரா நாம், டாக்ஸி டிரைவர், முனீம்ஜி, அமீர் கரீப், வாரண்ட், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, தேஸ் பர்தேஸ், ஹம் தோனோ ஆகிய திரைப்படங்கள் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றன.


இளமை மாறாமல் இருந்ததால் மார்க்கண்டேயன் நடிகர் என்று புகழப்பட்ட இவருக்கு 2001ம் ஆண்டு இந்தியாவின உயர் விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. 2002ம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தது. 2 முறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்


தேவ் ஆனந்த் 1949ம் ஆண்டு 'நவ்கேதன் இன்டர்நேஷனல் பிலிம்ஸ்' என்ற பட நிறுவனத்தைத் தொடங்கி 35க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். தேவ் ஆனந்த்துடன் பிறந்த இரு சகோதரர்களான சேத்தன் ஆனந்த், விஜய் ஆனந்த் ஆகியோரும் கூட திரைத் துறையில் பிரபலமானவர்கள்தான். இவரது சகோதரி ஷீல் காந்தா கபூரின் மகன்தான் பிரபல இயக்குநர் சேகர் கபூர் ஆவார்.


மூலம்

[தொகு]