பிரபல பின்னணிப் பாடகர் கே. ஜே. யேசுதாசுக்கு ஸ்ரீ நாராயண விருது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சனவரி 7, 2012

பிரபல இந்திய கருநாடக இசைக் கலைஞரும் பின்னணிப் பாடகருமான கே. ஜே. யேசுதாசுக்கு 2011ம் ஆண்டுக்கான ஸ்ரீ நாராயண விருது இன்று வழங்கப்படவுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெறும் இவ் விழாவில் சிவகிரை மடாதிபதி பிரகாசானந்த சுவாமிகள் விருதையும், ரூ.50,000 பரிசுத் தொகையும் ஜேசுதாசுக்கு வழங்குகிறார். விருது வழங்கும் விழாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் எம். ராமச்சந்திரன் ஆரம்பித்து வைக்க உள்ளார்.


கே. ஜே. யேசுதாஸ்

யேசுதாஸ் தமது 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 40,000கும் அதிகமான திரைப்பாடல்களையும் பக்திப்பாடல்களையும் பாடி சாதனை புரிந்துள்ளார்.


தெய்வீகப் பாடகர் எனப் போற்றப்படும் யேசுதாசுக்கு கலை மற்றும் கலாசாரத்தில் தன்னிகரற்ற பங்களிப்புகளுக்காக பத்மசிறி, பத்மபூசண் ஆகிய நடுவண் அரசு விருதுகளைப் பெற்றுள்ளார். திரைத்துறையில் சிறந்த பாடல்களை பாடியதற்காக 7 முறை தேசிய விருதும் 17 முறை மாநில விருதும் பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரின் திறமையை பாராட்டி அவருக்கு 2011ம் ஆண்டுக்கான ஸ்ரீ நாராயண விருது வழங்கப்படவிருக்கிறது.


இவரது இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் பின்பற்றி திரைப்படப் பின்னணி பாடகராக உருவெடுத்துள்ளார்.


மூலம்[தொகு]