பிரபாகரனின் தாயார் உடல்நிலை மோசம், சுயநினைவை இழந்தார்
- 17 நவம்பர் 2013: பிரித்தானியப் பிரதமர் கேமரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணப் பயணம்
- 25 அக்டோபர் 2013: வட மாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் புதிய கட்டடத்தில் தொடங்கியது
- 12 அக்டோபர் 2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றனர்
- 7 அக்டோபர் 2013: வடமாகாண சபையின் முதலமைச்சராக சி. வி. விக்னேசுவரன் அரசுத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றார்
- 24 செப்டெம்பர் 2013: வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு
ஞாயிறு, பெப்பிரவரி 6, 2011
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அவரைப் பராமரித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறினார்.
சாவகச்சேரி மருத்துவமனை வட்டாரங்களை ஆதாரம் காட்டி அவர் மேலும் தெரிவிக்கையில், பார்வதி அம்மாள் தற்போது சுய நினைவினை இழந்து விட்டதாகவும், அவரால் யாரையும் அடையாளம் காண முடியாதுள்ளதாகவும், பேசும் சக்தியையும் இழந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
”பார்வதி அம்மாளின் உறவினர்களுக்கு நான் தகவல் அனுப்பியுள்ளேன்,” என திரு. சிவாஜிலிங்கம் கூறினார்.
81 வயதான பார்வதியம்மாள் தொடர்பாக வல்வெட்டித்துறையில் சிகிச்சை அளித்துவரும் மருத்துவரான மயிலேறும் பெருமாள் யாழ்ப்பாணம் உதயன் செய்தியாளரிடம் கூறுகையில், ”பார்வதியம்மாவின் உடல் நிலை தளர்ந்து வருகின்றது. அவர் கடந்த ஒரு மாதமாகப் படுக்கையில் இருக்கிறார். அவருக்கும் பிள்ளைகள் தொடர்பான யோசனை அதிகமாகக் காணப்படுகின்றது. நீர் ஆகாரங்கள் குழாய் மூலமே உட்செலுத்தப்பட்டு வருகின்றன. இது திடீரென ஏற்படவில்லை. கடந்த பல நாட்களாக அவரது உடல்நிலை படிப்படியாகக் குன்றி வருகின்றது,” என்றார்.
பார்வதி அம்மாளின் கணவர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை சென்ற ஆண்டு காலமான நாள் தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கமே அவரைப் பராமரித்து வருகின்றார்.
பார்வதி அம்மாள் 2010 ஏப்ரல் 16 ஆம் நாள் மலேசியாவில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்தபோது, இந்திய அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதே விமானத்திலேயே மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்டார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மலேசிய அரசு மனிதாபிமான அடிப்படையில் அங்கு தங்கியிருக்க ஒரு மாத விசா வழங்கியிருந்தது. அதன் பின்னர் அவர் யாழ்ப்பாணம் வந்து வல்வெட்டித்துறை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- பிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது, விக்கிசெய்தி, ஏப்ரல் 18, 2010
மூலம்
[தொகு]- Prabhakaran's mother ill, டெய்லிமிரர், பெப்ரவரி 5, 2011
- பார்வதியம்மாவின் உடல்நிலை தொடர்ந்தும் முன்னர் போன்றே, உதயன், பெப்ரவரி 6, 2011
- விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் நிலை கவலைக்கிடம்: சுயநினைவை இழந்துள்ளார், தமிழ்வின், பெப்ரவரி 5, 2011