பிரித்தானிய எழுத்தாளர் சிங்கப்பூரில் கைது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், சூலை 20, 2010

மரண தண்டனையை சிங்கப்பூர் அரசு பயன்படுத்தும் முறை குறித்து புத்தகம் ஒன்றை எழுதிய அலன் சாட்றேக் என்ற பிரித்தானிய எழுத்தாளரை சிங்கப்பூர் காவல்துறையினர் ஞாயிறன்று கைது செய்துள்ளனர்.


Once A Jolly Hangman: Singapore Justice in the Dock என்பது அலன் சாட்றேக் எழுதிய புத்தகத்தின் பெயராகும். கைது செய்யப்படுவதற்கு முதல் நாள் அவர் தனது புத்தகத்தை வெளியிட்டார்.


நிரூபிக்கப்படும் பட்சத்தில் இரண்டரை வருடங்கள் வரை சிறைத் தண்டனைக்கு வழி செய்யும் குற்றவியல் அவதூறு குறித்த புலன்விசாரணையின் ஒருபகுதியாக 75 வயதான அலன் சாண்ட்றேக் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.


தாம் அவரது புத்தகத்தை தடை செய்யவில்லை என்று கூறியுள்ள சிங்கப்பூர் அரசாங்கம், அதனை வைத்திருக்காதீர்கள் என்று கடைக்காரர்களிடம் சொல்ல அரசாங்கத்துக்கு உரிமை உள்ளது என்றும் கூறுகிறது. இப்புத்தகம் சிங்கப்பூரின் நீதித்துறையின் பக்கசார்பின்மை, நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரம் ஆகியவை குறித்து சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக சிங்கப்பூரின் சட்டமா அதிபர் அலுவலகம் கூறுகிறது.


பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் சாங்கி சிறையில் தூக்குத்தண்டனையை நிறைவேற்றுபவராக பணியாற்றி, தற்போது ஓய்வுபெற்றுள்ள தார்சன் சிங் என்பவரது நேர்காணலையும் இந்த புத்தகம் உள்ளடக்கியுள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் பேட்டிகளும் அதில் இடம்பெற்றிருக்கின்றன.


ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதாக காவல்துறையினரால் கூறப்படுகின்ற குற்றவியல் அவதூறு புலனாய்வுகளுடன், நீதிமன்ற அவமரியாதை குறித்த குற்றச்சாட்டுக்களையும் இணைக்க சட்டமா அதிபர் அலுவலகம் விரும்புகிறது.


கொலை, தேசத்துரோகம், போதை மருந்து கடத்தல் மற்றும் ஏனைய குற்றங்களுக்கு மரண தண்டனை என்பது சிங்கப்பூரில் கட்டாயமானதாகும். குற்றங்களின் வீதத்தை குறைவாகப் பேணுவதற்கு அது மிகவும் அவசியம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மூலம்[தொகு]

Bookmark-new.svg