பிரேசிலின் முதலாவது பெண் அரசுத்தலைவராக டில்மா ரூசெப் தெரிவானார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 1, 2010

பிரேசிலின் அரசுத்தலைவராக டில்மா ரூசெஃப் தெரிவு செய்யப்பட்டதாக அந்நாட்டின் தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.


டில்மா ரூசெஃப்

நாட்டின் முதலாவது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 62 வயதான ரூசெஃப் முன்னெப்போது எந்தப் பதவிகளையும் வகிக்காதவர். பிரேசில் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது எனவும் வறுமையை ஒழிப்பதே தமது முக்கிய குறிக்கோளாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இரண்டு தடவைகள் பதவி வகித்து பிரேசில் மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற லூயிஸ் இனாசியோ லூலா ட சில்வா பதவி விலகியதை அடுத்து இடம்பெற்ற தேர்தலில் டில்மா ரூசெஃப் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் ரூசெப்பின் வெற்றியை வீதிகளில் இறங்கிக் கொண்டாடினர்.


அநேகமாக அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் மொத்த வாக்குகளில் ரூசொப் 56 விழுக்காடு வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சியான சமூக சனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒசே சேரா 44 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார்.


முதல் கட்ட வாக்கெடுப்பு அக்டோபர் 3 ஆம் நாள் இடம்பெற்று அதில் ரூசெப் 47 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்றதால், இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றது.


தன்னைத் தெரிவு செய்ததன் மூலம், மக்களாட்சி முறை பிரேசிலில் முன்னேற்றம் கண்டு வருவதையே காட்டுகிறது என டில்மா ரூசெஃப் தெரிவித்தார். 2011 சனவரி 1 ஆம் நாளன்று டில்மா ரூசெப் பதவியேற்பார்.


மூலம்[தொகு]