பிரேசில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு, 12 மாணவர்கள் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 8, 2011

பிரேசிலின் ரியோ டி ஜெனெய்ரோ நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் நபர் ஒருவர் தனது துப்பாக்கியால் 12 சிறுவர்களைக் கொன்றுவித்துத் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.


துப்பாக்கிதாரி 23 வயதான முன்னாள் மாணவர் என இனங் காணப்பட்டுள்ளார். இத்தகைய நிகழ்வு பிரேசில் நாட்டில் முதல் தடவையாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.


ஒலிவெய்ரா இந்த நபர் பாடசாலை ஆரம்பித்த போது தான் பாடசாலையில் கற்பிப்பதற்காக வந்துள்ளதாகத் தெரிவித்து உள் நுழைந்துள்ளார். பின்னர் ஒரு வகுப்பறையினுள் நுழைந்து அங்கு சரமாரியாகச் சுட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த சில மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடி காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.


"காவல்துறையினர் உடனடியாக அங்கு வந்திராவிட்டால் அங்கு மேலும் பலர் இறந்திருப்பர்," எனக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொலைகாரனின் உடையில் கடிதம் ஒன்று இருந்ததாகவும், தான் தற்கொலைத் தாக்குதலுக்கே அங்கு வந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.


அரசுத்தலைவர் டில்மா ரூசெஃப் தான் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாகத் தெரிவித்தார்.


மூலம்[தொகு]