உள்ளடக்கத்துக்குச் செல்

பீகாரில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் கூட்டத்தில் குண்டுவெடிப்புகள், 6 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 28, 2013

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடி பங்குபற்றவிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 80 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நால்வரைக் கைது செய்துள்ளனர்.


பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட பாட்னா பொதுக் கூட்டத்தில் அடுத்தடுத்த 6 இடங்களில் குண்டு வெடித்தது. முன்னதாக பாட்னா ரெயில் நிலையத்தில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த 8 குண்டு வெடிப்புகளில் சிக்கி 6 பேர் பலியானார்கள். 102 பேர் காயம் அடைந்தனர்.


பீகார் மாநிலத் தலைநகர் பட்னாவில் உள்ள பூங்கா ஒன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இக்குண்டுகள் வெடித்தன. இப்பூங்காவில் நரேந்திர மோடி உரையாற்றவிருந்தார். எந்த இயக்கமும் இத்தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை.


"தாக்குதலில் ஈடுபட்ட ஒருவரைக் கைது செய்துள்ளோம், அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் மூவரைக் கைது செய்துள்ளோம்," என மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களுக்குக் கூறினார். வெடிக்க வைக்கப்பட்ட குண்டுகள் அனைத்தும் வீடுகளில் தயாரிக்கப்பட்ட சிறிய வகைக் குண்டுகள் என அவர் தெரிவித்தார்.


முதலாவது குண்டு பட்னா தொடருந்து நிலையத்தில் காலை 09:30 மணிக்கு வெடித்தது. இக்குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இம்தியாஸ் அன்சாரி என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து கூட்டம் நடைபெறவிருந்த பகுதிகளில் ஏழு குண்டுகள் வெடித்தன. இரண்டு குண்டுகள் வெடிக்கவில்லை.


உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகரில் நடந்த கலவரத்தில் முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே கூட்டத்தில் குண்டுகளை வெடிக்க செய்ததாக கைது செய்யப்பட்ட அன்சாரி தெரிவித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


நரேந்திர மோடி இந்திய அரசியலில் மிகவும் செல்வாக்கு மிகுந்த ஒரு தலைவராகக் கணிக்கப்படுகிறார். 2002 ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் இடம்பெற்ற இந்து-முசுலிம் கலவரங்களைத் தடுக்க இவர் தவறி விட்டார் என இவர் மீது குற்றம் சுமத்தப்படுகிறது. இக்கலவரத்தில் 1000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


மூலம்

[தொகு]