புதன் கோளின் வடமுனையில் நீர்ப் பனிக்கட்டி இருப்பது உறுதியானது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 1, 2012

புதனின் வடக்கு முனையில் பல பில்லியன் தொன்கள் நீர் இருப்பது அறிவியலாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.


மெசஞ்சர் விண்கலம் தொடர்ந்து அனுப்பிய தகவல்களில் இருந்து இது உறுதி செய்யப்பட்டதாக சயன்ஸ் அறிவியல் இதழில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்பனிக்கட்டிகளின் பெரும்பகுதி சேதன மற்றும் எளிதில் ஆவியாகும் மூலக்கூறுகள் அடங்கிய கரும் பொருட்களைக் கொண்ட காப்புப் படலங்களின் அடியில் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பூமிக்கு எவ்வாறு இவ்வகையான மூலக்கூறுகள் முதன் முதலாக வந்திருக்கலாம் என்பதை அறிவதற்கு இந்தக் கண்டுபிடிப்பு உதவும் எனக் கருதப்படுகிறது.


2011 மார்ச்சு மாதத்தில் மெசஞ்சர் விண்கலம் புதன் கோளை அடைந்தது. புதனின் சுற்றுவட்டத்தை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.


புதன் கோளில் இருந்து வெளிவரும் நியூத்திரன்களை அளக்கக்கூடிய "நியூத்திரன் நிறமாலைமானி" ஒன்று மெசஞ்சர் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த நிறமாலைமானியின் மூலமே நீர்ப் பனிக்கட்டிகளின் இருப்பு பற்றி அறியப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]