உள்ளடக்கத்துக்குச் செல்

மெசஞ்சர் விண்கலம் புதனின் சுற்றுப்பாதையை அடைந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 18, 2011

நாசாவின் மெசஞ்சர் விண்கலம் புதன் கோளின் சுற்றுப்பாதையை இன்று வெளிக்கிழமை அதிகாலை கிரீனிச் நேரப்படி 0145 மணிக்கு வெற்றிகரமாக அடைந்தது. புதனின் சுற்றுப்பாதைக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.


புதனின் சுற்றுப்பாதையில் மெசஞ்சர்

சூரியனுக்கு மிகக்கிட்டவாக இருப்பதால், இங்கு அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளுவது மிகவும் கடினமாக இருக்கும். இதன் மேற்பரப்பு வெப்பநிலை ஈயத்தை உருக்கக்கூடியது. இதன் காரணமாக மெசஞ்சர் விண்கலம் சூரியனின் வெப்பத்தைத் தாங்கும் விதத்தில் தகுந்த கவசத்தையும் கொண்டுள்ளது.


மெசஞ்சர் விண்கலம் தற்போது சூரியனில் இருந்து கிட்டத்தட்ட 46 மில். கிமீ தூரத்திலும், பூமியில் இருந்து 155 மில். கிமீ தூரத்திலும் உள்ளது.


அடுத்தடுத்த மாதங்களில் இவ்விண்கலத்தில் இருந்து வியக்கத்தக்க ஆய்வு முடிவுகளை எதிர்பார்ப்பதாக இத்திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான சோன் சொலமன் தெரிவித்தார்.


மெசஞ்சர் விண்கலம் புதனின் மேற்பரப்புக்கு கிட்டத்தட்ட 200 கிமீ கிட்டவாக சென்று அதில் பொருத்தப்பட்டுள்ள ஏழு ஆய்வு கருவிகளின் மூலம் தேவையான தகவல்களைப் பெற்றுப் பின்னர் மேற்பரப்புக்கு அதிகூடிய தூரத்துக்கு (கிட்டத்தட்ட 15,000 கிமீ) வரும்போது அத்தகவல்களை பூமிக்கு அனுப்புவதே மெசஞ்சரின் திட்டமாக இருக்கும்.


மெசஞ்சர் விண்கலம் கிட்டத்தட்ட ஓர் ஆண்டு காலத்துக்கு புதனின் சுற்றுப்பாதையில் தங்கியிருக்கும். அக்காலப்பகுதியில் அது புதனை 730 தடவைகள் சுற்றி வரும்.


485-கிகி எடையுள்ள மெசஞ்சர் விண்கலம் 2004 ஆம் ஆண்டு ஆகத்து 3 ஆம் நாள் ஏவப்பட்டது. இதற்கு முன்னர் மரைனர் 10 என்ற விண்கலம் 1974-1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்து அனுப்பியிருந்தது. மெசஞ்சர் விண்கலம் முன்னதாக வெள்ளிக்கு கிட்டவாக இரண்டு தடவையும் புதனுக்குக் கிட்டவாக மூன்று தடவையும் வெற்றிகரமாகச் சென்றிருந்தது. புதனின் சுற்றுப்பாதையை அடைவது இதுவே முதற் தடவையாகும்.


இந்தத் தசாப்த காலத்தில் ஐரோப்பிய மற்றும் சப்பானிய விண்வெளி நிறுவனங்களும் புதனுக்கு தமது விண்கலங்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளன. இக்கூட்டுத்திட்டம் பேப்பிகொழும்பு என அழைக்கப்படுகிறது. இது 2014 ஆம் ஆண்டில் புதனை நோக்கி அனுப்பப்படவிருக்கிறது.


மூலம்

[தொகு]