உள்ளடக்கத்துக்குச் செல்

புதிய வகை நிலநீர்வாழி இனம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 24, 2012

இந்தியாவின் வடகிழக்கே நிலநீர்வாழிகளின் புதுமையான கிளைகளில் ஒன்றான சிறுகண் காலிலிகளின் (சிசீலியன்கள்) புதிய குடும்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மண்புழுக்கள் போன்று தோற்றமளிக்கக்கூடிய இந்த இனம் காட்டு மண்ணில் வாழக்கூடியவை. இவை இந்தியத் துணைக்கண்டமும், ஆப்பிரிக்க நிலப்பகுதியும் ஒன்றாக கோண்டுவானா பெருங்கண்டமாக இருந்து பிரிந்ததில் இருந்து ஏறத்தாழ 140 மில்லியன் ஆண்டுகளாக இக்குடும்பத்தின் இனங்கள் தனியாக படிவளர்ச்சி பெற்று வந்துள்ளதாக இவற்றின் டி.என்.ஏக்களை ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளது.


இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் ஏறத்தாழ 250 இடங்களில் தோண்டிக் கண்டறிந்ததில் இந்த விலங்கினங்கள் தனிக் குடும்பமாக அறிவிக்கப்பட்டுள்ளன. சிசீலியன் குடும்பத்தில் இது 10வது வகையாகும். இவற்றுக்கு உள்ளூர் காரோ மொழியில் சிக்கிலிடே எனப் பெயரிடப்பட்டுள்ளது.


தாம் தோண்டிய பகுதிகளின் கிட்டத்தட்ட கால்வாசிப் பகுதிகளில் இந்த வகை சிக்கிலிடேக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இப்பகுதிகளில் பெருமளவு காணப்படுவதற்கு சாத்தியம் உள்ளது என இவ்வாய்வுக்குத் தலைமை தாங்கிய தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சத்தியபாமா தாஸ் பிஜு பிபிசிக்குத் தெரிவித்தார்.


மனிதக் குடியிருப்புகளிலும் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை தவறுதலாக நச்சுப் பாம்புகள் எனக் கருதப்பட்டு மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன. ஆனால், இவை எவ்வித நஞ்சையும் கொண்டிருக்கவில்லை எனப் பேராசிரியர் பிஜு தெரிவித்தார்.


இந்தியாவில் புதிய நிலநீர்வாழிகளைக் கண்டுபிடிப்பதில் பேராசிரியர் பிஜு முன்னணியில் உள்ளார். இதனால் இவரை "தவளை மனிதன்" என்றும் அழைப்பர். லண்டன் ரோயல் கழக இதழில் சிக்கிலிடே குறித்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.


மூலம்

[தொகு]