புறக்கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள் முதற்தடவையாக அவதானிப்பு

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, சூன் 30, 2012

நமது சூரியக் குடும்பத்திற்கு அப்பால் உள்ள புறக்கோள் ஒன்றின் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களை வானியலாளர்கள் முதற்தடவையாகக் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி அனுப்பிய தகவல்களை ஆராய்ந்த பன்னாட்டு அறிவியலாளர்கள் குழு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.


எச்டி 189733பி புறக்கோள்

இந்தப் புறக்கோளின் சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பே இதன் வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்களுக்குக் காரணம் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த சூரிய வெடிப்பை நாசாவின் சுவிஃப்ட் செயற்கைக்கோள் அவதானித்துள்ளது.


"ஹபிள் மற்றும் சுவிஃப்ட் ஆகிய விண்கருவிகளின் பல்-அலைநீள அவதானிப்பு நமக்கு சூரியன் ஒன்றின் ஆற்றல் மிகுந்த ஒளிக்குழம்பினதும், ஒரு மாபெரும் புறக்கோள் ஒன்றின் வளிமண்டலத்தினதும் முன்னொருபோதும் தெரியாத ஒரு இடைத்தாக்கத்தை நமக்குக் காட்டியுள்ளது," என பாரிசு வானியற்பியல் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அலெயின் லேக்கவெலியே கூறினார்.


எச்டி 189733பி என்ற புறக்கோள், வியாழன் கோளைப் போன்ற ஒரு வளிமக் கோள் ஆகும். வியாழனை விட 14% பெரிது. இக்கோள் தனது சூரியனை 3 மில். மைல்கள் தூரத்திலேயே சுற்றி வருகிறது. 2.2 நாட்களில் அது தனது சூரியனைச் சுற்றி வருகிறது. இதன் சூரியன், எச்டி 189733ஏ, எமது சூரியனை விட 80% பெரியது. இக்கோளின் வளிமண்டலம் ஆகக்கூடியது 1,030 செல்சியசு வெப்பநிலைக்கு செல்லக்கூடியது. இந்த சூரியத் தொகுதி 63 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.


முன்னர் இடம்பெற்ற ஆய்வுகளின் படி, இந்தக் கோளின் மேல் வளிமண்டலத்தில் இருந்து ஐதரசன் வளிமம் வெளியிடப்படுவது அவதானிக்கப்பட்டது. ஒவ்வொரு செக்கனுக்கும் 1,000 தொன்கள் வெளியிடப்படுவதாக ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளார்கள். 300,000 மைல்/மணி வேகத்தில் ஐதரசன் அணுக்கள் வெளியேறி வருகின்றன. சூரியனின் பெரும் எரிமலை வெடிப்பால் வெளியிடப்படும் பெருமளவு எக்சு-கதிர்கள், மற்றும் புறவூதாக்கதிர் வெப்பத்தினால் கோளின் வளிமண்டலம் சூடாவதால் ஐதரசன் அணுக்கள் வெளியேறுகின்றன. 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் நாள், அதாவது ஹபிள் தொலைநோக்கி புறக்கோள் சூரியனை அணுகியதை அவதானித்து 8 மணித்தியாலங்களின் பின்னர், சுவிஃப்ட் செயற்கைக்கோள் சூரியனின் எரிமலை வெடிப்பை அவதானித்துள்ளது. இந்த வெடிப்பினால் எக்சு-கதிர்கள் 3.6 மடங்கு அதிகமாக வெளியிடப்பட்டன.


நமது சூரிய எரிமலை வெடிப்பினால் பூமி பெறும் எக்சு-கதிர்களை விட 3 மில்லியன் மடங்கு அதிகமாக எச்டி 189733பி புறக்கோள் பெறுகிறது என அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg