புவியைப் போன்ற மிகச்சிறிய புறக்கோள் கண்டுபிடிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சனவரி 11, 2011

எமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே புவியைப் போன்ற பாறைகளைக் கொண்ட மிகச்சிறிய புறக்கோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


கெப்லர்-10பி புறக்கோள்

கெப்லர்-10பி என்ற இந்தப் புறக்கோள் புவியை விட 1.4 மடங்கு விட்டத்தையும், 4.6 மடங்கு பாரமானது என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், இக்கோள் தனது சூரியனை மிகக் கிட்டவாக சுற்றி வருவதால் அங்கு உயிரினங்கள் வாழும் சாத்தியங்கள் இல்லை என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.


ஐக்கிய அமெரிக்காவின் சியாட்டலில் இடம்பெற்ற அமெரிக்க வானியல் கழகத்தின் 217வது ஆண்டுக்கூட்டத்தின் போது நாசாவின் கெப்லர் குழுவினர் இந்த முடிவுகளை அறிவித்தனர்.


கெப்லர் வானியல் தொலைநோக்கி தூரத்தேயுள்ள புறக்கோள்களை அறிவதற்கு 2009 மார்ச் மாதத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இது முதன் முதலில் 560 ஒளியாண்டுகள் தூரத்தேயுள்ள புறக்கோளைக் கண்டுபிடித்தது. அதன் பின்னர் மேலும் பல புறக்கோள்களை அறிந்தது.


கெப்லர் தொலைநோக்கி "கடக்கும்" தொழில்நுட்பத்தில் தங்கியுள்ளது. அதாவது, தனது சூரியனுக்கும் (அல்லது விண்மீன்) புவிக்கும் இடையில் கடக்கும் புறக்கோள்களை இது கண்டுபிடிக்கிறது. விண்மீனில் இருந்து வரும் ஒரு மிகச்சிறிய ஒளி காலமுறை தோறும் தடுக்கப்படுவது, கோள் ஒன்று அதனைச் சுற்றி வருவதாகக் கருதப்படுகிறது.


கெப்லர் 10பி தனது சூரியனுக்கு மிகக் கிட்டவாகச் சுற்றுவதால் அதன் பகல் வெப்பநிலை 1300C ஆக இருக்கலாம், இதனால் அதில் உயிரினம் வாழ்வதற்கு சந்தர்ப்பம் இல்லை என சான் ஜோஸ் மாநிலப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நத்தாலி பத்தாலா பிபிசிக்குத் தெரிவித்தார்.


மூலம்