உள்ளடக்கத்துக்குச் செல்

பூமிக்குக் கிட்டவாக மாபெரும் கருந்துளை இருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 4, 2012

ஓரியன் விண்முகில் கூட்டத்தில் காணப்படும் விண்மீன்களின் வினோதமான நடத்தைகளுக்கு நமது சூரியனை விட 200 மடங்கு பருமனான கருந்துளை ஒன்று காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.


ஓரியன் விண்முகில் கூட்டம்

விரைவாக அசையும் விண்மீன்களைக் கொண்ட ஓரியன் விண்முகில் படலத்தை பன்னாட்டு வானியலாளர் குழுவொன்று ஆராய்ந்துள்ளது. இக்குழுவினரின் ஆய்வு முடிவுகள் முடிவுகள் வானியற்பியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.


ஓரியன் விண்முகில் கூட்டத்தில் குறைந்த திணிவுள்ள விண்மீன்களை விட அதிக பருமனையுடைய விண்மீன்கள் குறைந்த அளவில் காணப்படுகின்றன. முழுக் கூட்டமும் வெவ்வேறாகப் பிரிந்து செல்வதான தோற்றப்பாடுடன், இவை அதிக வேகத்துடன் அசைகின்றன.


“வானியலாளர்களுக்கு இந்த இயல்பு ஒரு புதிராகும்,” என ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓல்கர் பவும்கார்ட் கூறுகிறார்.


இந்த விண்மீன்களின் அசைவைக் கணிக்கும் போது, விண்மீனிடை வளிப்படலம் வெளிப்பக்கமாகச் செல்லும் போது விண்முகில் கூட்டம் விரிவடைவது அவதானிக்கப்பட்டது. பல பருமனான விண்மீன்கள் வெளியேறிச் செல்ல, சில விண்மீன்கள் முகில் கூட்டத்தின் நடுப்பகுதியை நோக்கிச் செல்கின்றன. இதன் போது மத்தியில் உள்ள மிகப் பருமனான விண்மீனுடன் அவை மோதுகைக்கு உள்ளாகின்றன.


“விண்முகில் கூட்டத்தின் நடுப்பகுதிக்குக் கிட்டவாக உள்ள பெரும் விண்மீன்கள் கருந்துளை ஒன்றில் அடங்குகிறது,” என இவ்வாய்வுக்குழுவின் தலைவர் செக் குடியரசைச் சேர்ந்த லாடிசுலாவ் சூபர் தெரிவித்தார். மிகப் பருமனான விண்மீன் நிலையற்றதாக வரும் போது அது கருந்துளையாக மாறுகின்றது.


“எமக்குக் கிட்டவாக வெறுமனே 1,300 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இவ்வாறானதொரு பெரும் கருந்துளை இருப்பது இந்தப் புதிரான பொருட்களை ஆராய நமக்குக் கிடைத்த சந்தர்ப்பமாகும்,” என அவர் கூறினார்.


மூலம்[தொகு]