பெரிய ஆட்ரான் மோதுவி மீண்டும் இயங்க வைக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 21, 2009



அணுக்கருத் துகள்களை மோதவிடும் பிரபலமான இயற்பியல் சோதனைக் கருவியான பெரிய ஆட்ரான் மோதுவி மீண்டும் இயக்க வைக்கப்பட்டது. பிரான்சு-சுவிட்சர்லாந்து எல்லையில் நிலத்துக்கடியில் 300 அடி ஆழத்தில் நீள வட்டத்தில் 27 கிமீ நீளத்துக்கு இந்தக் கருவியை அமைத்துள்ளனர். 14 மாதங்களுக்கு முன்னர் இக்கருவி இயக்கப்பட்டு ஒரு சில நாட்களில் கருவியில் ஏற்பட்ட பெரும் கோளாறு காரணமாக இப்பரிசோதனை இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.


27 கிமீ நீள பெரிய ஆட்ரான் மோதுவியின் ஒரு பகுதி

ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைகூடங்களில் நிறுவப்பட்டுள்ள இந்தக் கருவியின் ஆரம்ப பரிசோதனைக்காகச் செலவிடப்பட்ட £6 பில்லியன் பவுண்டுகளை விட இதனைத் திருத்துவதற்கு மேலதிகமாக £24 மில்லியன்கள் செலவிடப்பட்டன.


வெள்ளியன்று GMT நேரப்படி 1500 மணிக்கு அணுத்துகள்கள் மோதுவியின் வளையத்தினுள் செலுத்தப்பட்டு, 1930 மணிக்கு அவை முழு வளையத்தையும் சுற்றி வந்தன. சனியன்று மேலும் சோதனைகள் நடத்தப்பட விருக்கின்றன.


இந்தக் கருவியைக் கொண்டு புரோத்தன்களை 7 டெர்ரா இலத்திரன் வோல்ட்டில் மோதவிட்டால், சூரியனை விட பல மடங்கு அதிக வெப்பம் உருவாகும். இதன் மூலம், அணுக் கருத்துகள்கள் உருவாகும் என்றும், இதன் மூலம் பிரபஞ்சம் எப்படி ஒன்றாக பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த புதிய அறிவைப் பெறமுடியும் என்றும் இயற்பியலாளர்கள் நம்புகிறார்கள்.

மூலம்