பெலருஸ் தொடருந்து நிலையக் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழப்பு
- 24 செப்டெம்பர் 2012: பெலருஸ் நாடாளுமன்றத் தேர்தல்களை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
- 17 மார்ச்சு 2012: பெலருஸ் தொடருந்துக் குண்டுவெடிப்பு, குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றம்
- 28 சனவரி 2012: 2012 ஆஸ்திரேலிய திறந்த சுற்று இறுதிப் போட்டியில் விக்டோரியா அசரென்கா வெற்றி
- 12 ஏப்பிரல் 2011: பெலருஸ் தொடருந்து நிலையக் குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழப்பு
- 22 திசம்பர் 2010: பெலருசின் அரசுத்தலைவராக லூக்கசென்கோ நான்காம் முறையாகத் தெரிவு
செவ்வாய், ஏப்பிரல் 12, 2011
பெலருஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சுரங்கத் தொடருந்து நிலையம் ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
நேற்று திங்கட்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 1755 மணிக்கு அக்தியாபிர்ஸ்கயா தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று வந்து நின்ற போதே இக்குண்டு வெடித்துள்ளதாக நெரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர். இக்குண்டுவெடிப்பினால் தொடருந்து நிலையம் பெரும் சேதத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குண்டுவெடிப்புக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. தானியங்கி வானொலிக் கருவி மூலம் இக்குண்டு வெடிக்கவைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் தாம் சில காணொளி ஆதாரங்களைக் கண்டுபிடித்திருப்பதாகவும், இரண்டு ஆண்கள் இது தொடர்பாகத் தேடப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என அரசு கூறியுள்ளது. 5கிகி எடையுள்ள இக்குண்டு "அதிகமான மக்களைக் கொலை செய்யும் நோக்கோடு" அங்கு வைக்கப்பட்டுள்ளது என உட்துறை அமைச்சர் அனத்தோலி குலிசோவ் தெரிவித்தார்.
1994 ஆம் ஆண்டில் இருந்து அரசுத்தலைவராக இருக்கும் லூக்கசென்கோ சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக பன்னாட்டுக் கண்காணிப்பாளர்கள் கூறியிருந்தனர்.
இவரது தெரிவை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் 600 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர் இவர்களில் பலர் விசாரணைகளை எதிர்கொண்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
மூலம்
[தொகு]- "Belarus suspects two men over Minsk metro bomb blast". பிபிசி, ஏப்ரல் 12 11, 2011
- "Belarus says deadly metro blast was terrorist attack". ரியாநோவஸ்தி, ஏப்ரல் 11, 2011