உள்ளடக்கத்துக்குச் செல்

பெலருஸ் நாடாளுமன்றத் தேர்தல்களை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 24, 2012

முன்னாள் சோவியத் குடியரசான பெலருசில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அரசுத்தலைவர் அலெக்சாண்டர் லூக்கசென்கோவின் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றனர். இத்தேர்தல்களை முக்கியமான இரண்டு எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.


அனைத்து 110 தொகுதிகளிலும் குறைந்தது 50 விழுக்காட்டினர் வாக்களித்ததாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல்கள் நீதியாக நடைபெறவில்லை என லூக்கசென்கோவின் எதிராளிகள் தெரிவித்தனர்.


1994 ஆம் ஆண்டு முதல் பெலருசின் அரசுத்தலைவராக விளங்கும் லூக்கசென்கோ ஐரோப்பாவின் "கடைசி சர்வாதிகாரி" என வர்ணிக்கப்படுகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான்காவது தடவையாக அரசுத்தலைவர் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார்.


2010 இல் எதிர்க்கட்சிகள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை அடுத்து லுக்கசென்கோ மற்றும் அவரது அரசு அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.


சில சிறுபான்மை எதிர்க்கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட்ட போதும் அவர்கள் வெற்றி பெறவில்லை.


மூலம்[தொகு]