உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுநலவாயத் தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுவது குறித்து கனடா அதிர்ச்சி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஏப்பிரல் 28, 2013

பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் 2013 நவம்பரில் இலங்கையில் நடைபெறும் என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக உள்ளது என கனடாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம் சாத்தானை பொதுநலவாய நாடுகள் அமைப்பு அரவணைக்கிறது என்றும் கூறியுள்ளார்.


2009 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பின் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை என்றும் மக்களின் வாழ்க்கை மேலும் மோசமடைந்துள்ளது என்றும் கூறினார். பொதுநலவாய நாடுகளின் அடிப்படையான மக்களாட்சி, சுதந்திரம், மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி போன்ற அனைத்திலும் இலங்கை தோல்வியடைந்த நாடு என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஜான் பெயர்டு கூறினார்.


கனடிய பிரதமர் ஸ்டீவன் கார்ப்பர் இலங்கை கடைசிக் கட்ட உள்நாட்டுப்போரின் போது நிகழ்ந்த போர்க் குற்றங்களை விசாரிக்காவிட்டால் கனடா கூட்டத்தை புறக்கணிக்கும் என்று தெரிவித்தார்.


கனடா பல்வேறு அமைப்புகளில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததாகவும் அவற்றை தான் அனைத்து அமைப்புகளிலும் முறியடித்து வந்ததாகவும் இப்போது பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் இலங்கையில் நடைபெறும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக உள்ளதாக இலங்கையின் செய்தி மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ரம்புவெல்ல கூறியுள்ளார்.


பொதுநலவாய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கமலேசு சர்மா எந்த உறுப்பினர் நாடும் கூட்டம் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என்று கேட்கவில்லை என்று இலண்டனில் கூறினார்.


ஆத்திரேலியா இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டம் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க மறுத்துவிட்டது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தை புறக்கணித்தால் அது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிடும் என ஆஸ்திரேலியா கருதியபோதிலும் கனடாவை முன் மாதிரியாக கொண்டு கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று முன்னாள் ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம் பிரேசரும் கிரீன் கட்சி தலைவர் மில்னும் கூறியுள்ளனர். கனடா புறக்கணிப்பதாக எடுத்த முடிவு துணிவுள்ள முடிவு என்று மில்ன் கூறியுள்ளார்.


மூலம்

[தொகு]