உள்ளடக்கத்துக்குச் செல்

போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை உடன் ஆரம்பிக்கவேண்டும், நவி பிள்ளை எச்சரிக்கை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 2, 2011

இலங்கைப் போர்க்குற்றக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை உடன் ஆரம்பிக்க வேண்டுமெனவும், விசாரணையை இழுத்தடிக்க நினைத்தாலோ அல்லது அதிக காலம் எடுத்துக் கொண்டாலோ, சர்வதேச நடவடிக்கைக்கு அது வழிவகுக்கும் என்றும் ஐ.நா மன்ற மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை எச்சரித்திருக்கிறார்.


நவநீதம் பிள்ளை

சிறைப் பிடிக்கப்பட்டவர்களை சுட்டுக்கொன்றது மற்றும் பிற தாக்குதல் சம்பவங்கள் நடந்ததான குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கை கவனமாக ஆராயவேண்டும் என்று ஐ.நா மன்ற உறுப்பு நாடுகள் மத்தியில் மிக அதிகளவு எதிர்பார்ப்பு இருப்பதாக, போரின் இறுதிக் கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடந்த வியாழக்கிழமை அவர் கருத்து தெரிவித்த போது சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த விசாரணை என்பது ஒரு காலவரம்பற்ற, முடிவில்லாத வழிமுறையாக இருக்கக்கூடாது என்று கூறிய நவி பிள்ளை, இலங்கை அரசு ஏற்கனவே தானாக முன்வந்து நடத்திய உள்நாட்டு அளவிலான விசாரணை அதற்கு தரப்பட்ட பணியை முடிக்க தவறிவிட்டது, வெளிப்படை இல்லாத அந்த விசாரணை குறித்த விவரம், அறிக்கை வெளியிடப்படவில்லை. அந்த விசாரணையின் விளைவாக ஒருவர் கூட நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்படவில்லை என்றார்.


அதே போல் இப்போதும் நடந்தால், சர்வதேச சமுதாயம் ஒருங்கிணைந்து மேல் நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் இருக்கிறது என்று கூறிய நவி பிள்ளை, ஐ.நா மன்ற மனித உரிமை கவுன்சில் இந்த விடயத்தை மேலும் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.


இதற்கிடையில், இறுதிக்கட்டப் போரின் போதான தனது சொந்தச் செயற்பாடுகளை எவ்வாறு மீளாய்வு செய்வது என்பதைத் தீர்மானிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. நேற்று தெரிவித்துள்ளது. "எமது சொந்த நடவடிக்கைகளை எப்படி மீளாய்வு செய்வது என்பதை தீர்மானிப்பதற்கான பணிகளை ஐ.நா. செயலகம் ஆரம்பித்துள்ளது. இந்த மீளாய்வுக்கான வகைகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா.வின் பல்வேறு முகவரகங்களை செயலகத்திலுள்ள அதிகாரிகள் அணுகியுள்ளனர். ஆனால் மீளாய்வு இன்னும் ஆரம்பமாகவில்லை," என ஐக்கிய நாடுகளின் செயலாளரின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]