உள்ளடக்கத்துக்குச் செல்

மகாத்மா காந்தியின் ஆப்பிரிக்க வீட்டை வாங்க இந்தியா ஆர்வம்

விக்கிசெய்தி இலிருந்து
தென்னாப்பிரிக்காவில் காந்தி (1895)

வெள்ளி, ஆகத்து 7, 2009, தில்லி, இந்தியா:


தென் ஆபிரிக்காவில் ஜொகான்னஸ்பர்க் நகரில் மகாத்மா காந்தி வாழ்ந்த வீட்டை வாங்க இந்திய நடுவண் அரசு நிறுவனமான "கோல் இந்தியா" விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து கான்பூரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "என்ன விலையாக இருந்தாலும் சரி, வீட்டை வாங்குமாறு நிலக்கரித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கோல் இந்தியா நிறுவனம் இந்த வீட்டை வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளது. கோல் இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஜொகான்னஸ்பர்க் சென்று அந்த வீட்டைப் பார்வையிடவுள்ளனர். அவர்களுடன் நானும் செல்லவுள்ளேன்.


ஒருவேளை இந்த வீட்டை இந்திய வம்சாவளியினர் அல்லது வேறு இந்திய நிறுவனம் வாங்க முடிவு செய்திருந்தால், இந்த வீட்டை வாங்கும் முடிவிலிருந்து கோல் இந்தியா பின்வாங்கும். தேசத் தந்தை வசித்த வீட்டை நினைவகமாக காக்க வேண்டியது நமது கடமை. இதனால் இத்தகைய முயற்சியை கோல் இந்தியா மேற்கொண்டுள்ளது" என்றார்.


மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும், பிரபல கட்டடக கலை நிபுணருமான ஹெர்மான் காலென்பாக் இந்த வீட்டை வடிவமைத்துக் கொடுத்தார். முற்றிலும் ஓடுகளால் வேயப்பட்டது இந்த வீடு. இனவெறிக்கு எதிராகப் போராடும் வழக்கறிஞராக அவர் பணியாற்றியபோது அங்கு வசித்தார். தற்போது இந்த வீடு நான்சி பால் என்ற பெண்மணியிடம் உள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார் நான்சி. தற்போது கேப்டவுனுக்கு அவர் இடம் பெயரவுள்ளதால் வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். வீட்டின் விலை 3.5 லட்சம் டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அதிக விலை என்று கூறியே இதுவரை எவரும் வீட்டை வாங்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டை வாங்க காந்தியின் கொள்ளுப்பேத்தியான கீர்த்தி மேனனும் ஆர்வம் தெரிவித்திருந்தார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]