மத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 15, 2013

மத்திய கிழக்கு நாடுகளில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அலக்சா எனப் பெயரிடப்பட்டுள்ள பனிப்புயலால் மத்திய கிழக்கின் மேற்கு நாடுகள் முழுவதும் கடும் பனிப்பொழிவு, மழை, மணல் காற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், இஸ்ரேல், எகிப்து, பாலஸ்தீனம், இராக், சவுதி அரேபியாவின் சில பகுதிகளில் இந்த புயலின் தாக்கம் உணரப்பட்டது.


எகிப்தின் வறட்சியான சினாய் தீபகற்பத்தில் தொடர்ந்து பனி பொழிவு ஏற்பட்டதுடன், 100 ஆண்டுகளுக்குப் பின் கய்ரோ நகரத்தில் பனிமழை பொழிந்துள்ளது. இஸ்ரேலின் பல பாகங்களில் 60 ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட இப் பனிமழையால் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


பாலஸ்தீனத்தின் பெத்லகேம் நகரம் பனிமழையால் போர்த்தப்பட்டுள்ள காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி உள்ளன. ஜெருசலேம் நகரில் 20 அங்குலத்துக்கு பனிமழை பொழிவு பதிவாகி உள்ளது. காசாவில் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு ஆளும் ஹமாஸ் கட்சி அவசரகால நிலையை அறிவித்துள்ளது.


இப் பனிமழை பொழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டது சிரியாவின் உள்நாட்டுக் கலவரங்களால் பாதிக்கப்பட்டு அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள அப்பாவி மக்களே. லெபனானின் பெக்கா பள்ளதாக்கில் திறந்தவெளிகளில் கொட்டாரமிட்டுள்ள சுமார் பத்து லட்சம் சிரிய அகதிகள் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சில உதவிகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றனர். மேலும் இலட்சக்கணக்கான அகதிகள் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


இஸ்ரேலில் பல இடங்களில் உள்கட்டமைப்புக்கள் கடுமையாக சேதமடைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு மட்டுமின்றி வட அமெரிக்கா, ஐரோப்பாவிலும் வழைமைக்கு மாறான கனத்த மழையும், கடும் பனிப்பொழிவுகளும் இவ்வாண்டு காணப்படுவதாக வானிலை செய்திகள் அறிவித்துள்ளன.


மூலம்[தொகு]