உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசியத் திரைப்படம் 'டண்டா புத்ரா' இனங்களுக்கிடையே சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டெம்பர் 5, 2013

மலேசிய அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ‘டண்டா புத்ரா’ என்னும் மலாய் மொழித் திரைப்படத்தின் சில காட்சிகள் அங்கு சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. மலேசியாவின் 56வது விடுதலை நாளை முன்னிட்டு இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.


இத்திரைப்படத்தில் 1969 மே மாதத்தில் நடந்த இனக்கலவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. சுமார் 200 பேர் கொல்லப்பட்ட அந்தக் கலவரத்திற்கு சீன இனத்தவரே காரணம் என்பது போன்ற கருத்துக்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. 1969 மே 13 முதல் சூலை 31 வரை கோலாலம்பூரிலும், ஏனைய பகுதிகளிலும் மலாய் இனத்தவருக்கும், சீன இனத்தவருக்கும் இடையில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் அதிகாரபூர்வ அறிக்கைகளின் படி 196 பேர் இறந்துள்ளனர். ஆனாலும், இறந்தோர் எண்ணிக்கை இதனை விட அதிகம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


‘தண்டா புத்ரா’ படத்தை திரையிட வேண்டாம் என பினாங்கு, செபராங் பிராய் ஊராட்சி மன்றங்கள் அம்மாநில அரசாங்கத்தில் கீழுள்ள திரைப்பட அரங்குகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. இங்கு சீன இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.


இத்திரைப்படத்தின் முக்கியமான ஒரு காட்சியில் மலேசியாவின் சீன இளைஞர்கள் மலேசிய நாட்டின் கொடி ஏற்றப்பட்டிருக்கும் கம்பத்தின் மீது சிறுநீர் கழிப்பதுபோல காட்சி சித்தரிக்கப்பட்டிருக்கிறது.


இதற்கிடையில், ஃபினாஸ் எனும் மலேசியத் தேசியத் திரைப்படக் கழகத்தின் அனுமதி இல்லாமல் திரையரங்குகள் இத்திரைப்படத்தைத் திரையிடுவதை ரத்துச் செய்தால், அவற்றின் அனுமதிகள் ரத்துச் செய்யப்படலாம் என இத்திரைப்படத்தின் இயக்குநர் சுகாய்மி பாபா தெரிவித்துள்ளார்.


மூலம்

[தொகு]