உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 18, 2014

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற மலேசிய ஏர்லைன்சு பயணிகள் விமானம் ஒன்று உக்ரைனில் போர் நடைபெறும் பகுதியில் வீழ்ந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டனர்.


உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள தோனெத்ஸ்க் வட்டாரத்திலேயே இவ்விமானம் வீழ்ந்துள்ளது. இவ்விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது தொடர்பாக கிளர்ச்சியாளர்களும் உக்ரைனிய அரசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியுள்ளனர்.


போயிங் 777 ரக மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 சக்தார்ஸ்க் என்ற இடத்தில் வெடித்து வீழ்ந்தது. இவ்விமானத்தில் மலேசியர் உட்படப் பல வெளிநாட்டவரும் பயணம் செய்ததாக மலேசியா ஏர்லைன்சு விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இவர்களில் 173 நெதர்லாந்து நாட்டவர், 27 ஆத்திரேலியர், 44 மலேசியர்கள் (இவர்களில் 15 பேர் விமானப் பணியாளர்கள்), 12 இந்தோனேசியர்கள், மற்றும் ஒன்பது பிரித்தானியர் ஆகியோர் அடங்குவர். அத்துடன் செருமனி, பெல்ஜியம், பிலிப்பீன்சு, கனடா, இந்தியா, ஆங்காங் நாட்டுக்காரரும் இருந்தனர். இறந்தவர்களில் உலகப்புகழ் பெற்ற டச்சு ஆய்வாளர் ஜோயெப் லாங்கேயும் அடங்குவார்.


வீழ்ந்த விமானத்தின் கறுப்புப் பெட்டிகளைத் தாம் கண்டெடுத்துள்ளதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவை மேலதிக ஆய்விற்காக உருசியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் வீழ்ந்த இடத்திற்கு பன்னாட்டு ஆய்வாளர்களை அனுமதிப்பதற்கு கிளர்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.


இவ்விமான விபத்து "பயங்கரவாதத்தின் ஒரு நடவடிக்கை" என உக்ரைனிய அரசுத்தலைவர் கூறினார். உருசியாவே இதற்குக் காரணம் என அவர் உருசியாவைக் குற்றம் சாட்டினார். தாம் ஒரு பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் இருவர் தமக்குள் தொலைபேசியில் உரையாடியதைத் தமது புலனாய்வுப் பிரிவு ஒட்டுக் கேட்டதாக உக்ரைனிய அரசு அறிவித்தது. இதற்கான ஆதாரங்களையும் உக்ரைனிய அரசு வெளியிட்டுள்ளது.


இவ்விபத்துக் குறித்து பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென உருசியத் தலைவர் பூட்டின் கேட்டுக் கொண்டார்.


முன்னதாக தமது இராணுவ விமானம் ஒன்றை உருசிய வான் படையினர் புதன்கிழமை அன்று சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் கூறியிருந்தது. கடந்த திங்களன்றும் சரக்கு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.


ஆசியாவில் இருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு விமானம் மூலம் செல்ல வேண்டுமாயின், உக்ரைன் வான் எல்லை வழியாக பறந்து செல்வது தூரம் குறைந்த பாதையாகக் கருதப்படுகிறது. உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் பல்வேறு உள்நாட்டு விமானங்களை இப்பகுதியில் ஏற்கனவே சுட்டு வீழ்த்தி இருந்ததால், இந்த பாதையை பன்னாட்டு விமான நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே அவ்வழியாக பறக்கும் அனைத்துப் பயணிகள் விமானங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


கிழக்கு உக்ரைனில் உடனடியாக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என பல உலகத் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்றைய விமான விபத்து குறித்து ஆராய்வதற்காக ஐநா பாதுகாப்பு அவை இன்று அவசரக் கூட்டம் ஒன்றை நடத்த விருக்கிறது.


கடந்த மார்ச் மாதத்தில் கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கிச் சென்ற மலேசியா ஏர்லைன்சு விமானம் எம்எச்370 239 பேருடன் காணாமல் போனது. இவ்விமானம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.


மூலம்

[தொகு]