உள்ளடக்கத்துக்குச் செல்

மாபெரும் வாயுக்குமிழியைக் கக்கிய கருங்குழி கண்டுபிடிக்கப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 9, 2010


1,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் மாபெரும் வெப்ப வாயுக் குமிழியைக் கக்கிய கருங்குழி (black hole) ஒன்றைத் தாம் அவதானித்ததாக வானியலாளர்கள் தெரிவித்தனர்.


கருங்குழிகள் அதிக வீச்சுடன் கூடிய வளிமத் துணிக்கைகளை வெளிவிடக்கூடியவை

இக்கருங்குழியில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்த வாயுக் குமிழி மேலும் விரிவடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சிலியில் உள்ள மாபெரும் தொலைநோக்கி, மற்றும் நாசாவின் சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் ஆகியவற்றில் இருந்து வானியலாளர்கள் இதனை அவதானித்துள்ளனர்.


இது குறித்தான ஆய்வு அறிக்கை ஒன்று நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


"கருங்குழியில் இருந்து வாயுக் குமிழிக்கு அனுப்பப்பட்ட பெருமளவு ஆற்றல் குறித்து நாம் வியப்படைகிறோம்," என ஸ்ட்ராஸ்பூர்க் பல்கலைக்கழக அறிவியலாளர் மான்பிரட் பாக்குல் தெரிவித்தார்.


கருங்குழிகள் பொதுவாக விண்பொருள் ஒன்றை விழுங்கும் போது பெருமளவு ஆற்றலை வெளிவிடுகின்றன. இவற்றில் பெருமளவு ஆற்றல் எக்ஸ்-கதிர்வீச்சாக வெளிப்படுகிறது. அதிக வீச்சுடன் வளிமத் துணிக்கைகளை வெளிவிடும் கருங்குழிகள் "மைக்ரோகுவாசார்கள்" (Microquasars) என அழைக்கப்படுகின்றன.


12 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள என்ஜிசி 7793 என்ற பால்வெளி மண்டலத்தில் உள்ள கருங்குழி எமது சூரியனிலும் பார்க்க சில மடங்கு எடையுள்ளது எனக் கருதப்படுகிறது. இது வெளிவிடும் வளிமக் குமிழியின் விரிவடையும் வேகத்தையும், அதன் எடையையும் நோக்குமிடத்து, வளிமத் துணிக்கைகளை வெளிவிடும் இந்த நடவடிக்கை கடந்த 200,000 ஆண்டுகளாக நடைபெறுகிறது என அனுமானிக்கலாம் என வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மூலம்

[தொகு]