உள்ளடக்கத்துக்குச் செல்

மாயன் மன்னரின் கல்லறை குவாத்தமாலாவில் கண்டுபிடிக்கப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூலை 18, 2010


தென்னமெரிக்காவின் குவாத்தமாலாவில் மாயன் மன்னர் ஒருவரின் நன்றாகப் பாதுகாக்கப்பட்ட கல்லறை ஒன்று தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரத்தில் செதுக்கிய சிலைகள், மட்பாண்டங்கள், துணிகள் மற்றும் ஆறு சிறுவர்களில் எலும்புகள் ஆகியனவும் அங்கு காணப்படுகின்றன. மன்னனின் இறப்பை அடுத்துக் காணிக்கையாக்கப்பட்ட சிறுவர்கள் இவர்கள் என நம்பப்படுகிறது.


குவாத்தமாலாவில் உள்ள மாயன் கோயில் ஒன்று

பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஸ்டீவன் ஹூஸ்டன் என்பவரின் தலைமையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.


கிபி 350 முதல் 400 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்த இக்கல்லறை எல் போட்ஸ் என்ற நகரில் உள்ள எல் டயபுலோ பிரமிதின் கீழே உள்ளது. இது கடந்த மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 15 வியாழக்கிழமை அன்று குவாத்தமாலா நகரில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.


"கல்லறை வைக்கப்பட்டிருந்த அறையை நாம் திறந்த போது, எனது தலையை உள்ளே நுழைத்துப் பார்த்தது நான் ஆச்சரியமடைந்தேன். அங்கு நறுமணம் வீசியது, கடும் குளிராகவும் இருந்தது," ஹூஸ்டன் கூறினார். "காற்று, மற்றும் சிறிதளவு நீர் கூடச் செல்லாமல் கல்லறை அடைக்கப்பட்டிருந்தது." கல்லறை மட்டும் 6 அடி உயரமும், 12 அடி நீளமும், 4 அடி அகலமும் கொண்டது.


இக்கல்லறையில் இருந்த உடல் வயது போன ஆண் ஒருவருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது இன்னும் உறுதிப் படுத்தப்படவில்லை. ஆறு சிறுவர்களின் எலும்புகள் அங்கு காணப்பட்டன. இவற்றில் இரண்டு முழுமையானதாக இருந்தது.


"கல்லறையின் அமைப்பைப் பார்த்தால், இது மாயன் நாகரீகத்தின் நிறுவனருடையதாக இருக்கலாம் என நாம் நம்புகிறோம்," என்றார் ஸ்டீவன் ஹூஸ்டன்.


"இது குறித்து இன்னும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டி உள்ளது. அரச குடும்பத்துக் கல்லறைகள் நிறைய விபரன்களைக் கொண்டுள்ளன. இவற்றை ஆராய்ந்து அறியப் பல ஆண்டுகள் செலவிட வேண்டியிருக்கும்," என்றார் அவர்.

மூலம்[தொகு]