மாலிக்கு 3,300 படையினரை அனுப்ப மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு 'எக்கோவாஸ்' முடிவு

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 12, 2012

இசுலாமியத் தீவிரவாதிகளிடம் இருந்து மாலியின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் அங்கு 3,300 படையினரை அனுப்ப மேற்காப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு எக்கோவாஸ் முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கான படைகயினர் நைஜீரியா, நைஜர், புர்க்கினா பாசோ ஆகிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்படுவர்.


கடந்த மார்ச் மாதத்தில் மாலியின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து மாலியின் வடக்குப் பகுதியை இசுலாமியக் குழுக்களும், துவாரெக் போராளிகளும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


மாலி மீதான இராணுவத் தலையீட்டுக்கு ஐக்கிய நாடுகள் ஒப்புதல் அளித்தவுடன் எக்கோவாஸ் படையினர் அங்கு அனுப்பப்படுவர் என ஐவரி கோஸ்ட் தலைவர் அலசானி ஒட்டாரா நைஜீரியத் தலைநகரில் வைத்து அறிவித்தார். நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் ஆரம்பத்தில் ஐநா பாதுகாப்புச் சபை இத்திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


பயிற்சி, மற்றும் முகாம்கள் அமைத்தல் போன்ற ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் உட்பட இத்திட்டத்தை ஆறு மாதங்களில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.


இராணுவத் தலையீடு பற்றிய விரிவான திட்ட அறிக்கை ஒன்றை 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கடந்த அக்டோபர் 12 அன்று ஐநா பாதுகாப்புப் பேரவை ஆப்பிரிக்க அமைப்புகளிடம் கேட்டிருந்தது.


இசுலாமியப் போராளிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடுமையான இசுலாமிய சரியா சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஐநா குற்றம் சாட்டியிருந்தது.


மூலம்[தொகு]