உள்ளடக்கத்துக்குச் செல்

மாலியின் பாலைவன நகரைப் போராளிகள் கைப்பற்றினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 31, 2012

கிழக்காப்பிரிக்க நாடான மாலியில் கிடால் நகரை துவாரெக் போராளிகள் கைப்பற்றியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவப் புரட்சியை அடுத்து இராணுவக் கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய ஒரு வாரத்தினுள் போராளிகள் இந்நகரைக் கைப்பற்றியுள்ளனர்.


கிடால் பிராந்தியத்தின் தலைநகரைப் போராளிகள் கைப்பற்றியிருப்பதை உள்ளூர் மக்கள் உறுதி செய்துள்ளனர். கிடால் பிராந்தியம் சகாரா பாலைவனம் வரை நீண்டுள்ளது. இராணுவத்தினரின் பெரும் முகாம் ஒன்று இந்நகரில் அமைந்துள்ளது. "கிடால் தற்போது எமது வசம் வந்துள்ளது. அனைத்து இராணுவ நிலைகளும் எம்மிடம் வீழ்ந்து விட்டன," என அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கத்தின் போராளி ஒருவர் தெரிவித்தார். மாலியின் அரசாங்கம் நாட்டின் வடக்கேயுள்ள தமது பிராந்திய மக்களைப் புறக்கணித்து வருவதாகக் குற்றம் சாட்டி துவாரக் இன மக்கள் அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராடி வருகின்றனர்.


இராணுவப் புரட்சியை நடத்திய காப்டன் அம்டோ சனோகோ போராளிகளை அடக்க வெளிநாட்டு உதவியைக் கோரியுள்ளார். மாலியின் அயல் நாடுகள், மற்றும் மேற்காப்பிரிக்க பொருளாதாரக் குழு (எக்கோவாஸ்) ஆகியன மாலி இராணுவப் புரட்சியைக் கண்டித்துள்ளதோடு பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளன. வரும் திங்கட்கிழமைக்குள் இராணுவம் ஆட்சியை நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கத் தவறினால், மாலியின் எல்லைப் பகுதிகளை மூடப்போவதாகவும், அதன் சொத்துக்களை முடக்கவிருப்பதாகவும் எக்கோவாஸ் அறிவித்துள்ளது. தமது அமைதி படையினரையும் அது தயார் நிலையில் வைத்துள்ளது.


துவாரக் போராளிகளில் பலர் லிபியாவில் முன்னாள் தலைவர் முவம்மர் கடாபியின் படைகளில் இணைந்து போராடிப் பின்னர் கடாபியின் வீழ்ச்சிக்யுடன் நாடு திரும்பியவர்கள் ஆவர்.


இராணுவக் கிளர்ச்சியாளர்களினால் பதவியில் இருந்து அகற்றப்பட்ட மாலியின் அரசுத்தலைவர் அமடோ தவுமானி தவுரே தாம் இன்னமும் மாலியிலேயே இருப்பதாகவும், நல்ல தேகநிலையுடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]