உள்ளடக்கத்துக்குச் செல்

மாலியில் இசுலாமியப் போராளிகளுடன் பிரெஞ்சுப் படையினர் சண்டை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 17, 2013

மாலியின் தலைநகர் பமாக்கோவுக்கு வடக்கே 350 கிமீ தூரத்தில் உள்ள டயபாலி நகர வீதிகளில் இசுலாமியப் போராளிகளுடன் பிரெஞ்சுப் படையினர் சண்டையிட்டு வருவதாக மாலிய, மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்தனர்.


மாலியின் வடக்கே இசுலாமியப் போராளிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளை மீட்க அங்கு பிரான்சியப் படையினர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். போராளிகள் தலைநகர் நோக்கி முன்னேறுவதைத் தடுப்பதே பிரெஞ்சுப் படையினரின் முதன்மைப் பணியாகும்.


இசுலாமியப் போராளிகள் கடந்த திங்கட்கிழமை அன்று டயபாலி நகரை மாலியப் படையினரிடம் இருந்து கைப்பற்றியிருந்தனர். அன்றில் இருந்து பிரெஞ்சு விமானப் படையினர் போராளிகளின் தளங்கள் மீது குண்டுகள வீசித் தாக்கி வருகின்றன. தற்போது தரைப்படையினரும் தமது தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர் என பிரெஞ்சு இராணுவத் தலைவர் எதுவார்த் கிலாட் தெரிவித்தார்.


மாலியில் தற்போது ஏறத்தாழ 800 பிரெஞ்சுப் படையினர் நிலை கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் 2,500 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பிரெஞ்சுப் படைகளுக்கு உதவியாக நைஜீரியாவும் தனது 190 படையினரை மாலிக்கு அனுப்பத் தீர்மானித்துள்ளது. இன்று இவர்கள் மாலியை அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பெனின், கானா, நைஜர், புர்க்கீனா பாசோ, டோகோ ஆகிய ஆப்பிரிக்க நாடுகளும் தமது படைகளை அனுப்ப முடிவு செய்துள்ளன. சாட் நாடும் 2,000 இராணுவத்தினரை அனுப்பவுள்ளது.


கடந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் இசுலாமிய, மற்றும் துவாரெக் போராளிகள் மாலியின் வடக்குப் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனடியாகவே, அல்-கைதாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதிகள் வடக்கின் பல பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இசுலாமிய சரியா சட்டத்தைத் தீவிரமாக அமுல் படுத்தினர்.


மேற்காப்பிரிக்கப் படையினர் மாலியின் வடக்கே தமது தாக்குதலை நடத்தத் தீர்மானித்திருந்த வேளையில், போராளிகள் தெற்கு நோக்கி நகர ஆரம்பித்தனர். கடந்த வியாழன் அன்று கோனா நகரை அவர்கள் கைப்பற்றினர்.


இதற்கிடையில், மாலியின் அயல் நாடான அல்ஜீரியாவில் அல்-கைதாவுடன் தொடர்புள்ள இசுலாமியப் போராளிகள் 40 இற்கும் அதிகமான வெளிநாட்டினரைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். இரு பணயக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பிரெஞ்சுப் படையினர் மாலியில் தமது தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மூலம்

[தொகு]