மாலியில் மசூதி நெரிசலில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 28, 2010

மாலியின் டிம்பக்டு நகரில் ஜின்கெரெபர் என்ற பிரபலமான மசூதியில் சனநெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்டதாக பிபிசி செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.


14ம் நூற்றாண்டு ஜின்கெரெபர் மசூதி

முற்றிலும் மண்ணால் அமைக்கப்பட்ட இம்மசூதியில் முகமது நபி அவர்களின் பிறந்த நாள் விழாவில் வெள்ளிக்கிழமை கலந்துகொள்ள வந்திருந்தவர்களே இவ்வாறு நெரிசலில் சிக்கினர்.


14ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மசூதியில் மீள் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், இதனால் பக்தர்கள் வழமையான வழியை விட மாற்று வழியைப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சகாரா பாலைவனத்தில் அமைந்துள்ள டிம்பக்டு நகரம், முன்னர் இசுலாமியக் கல்விக்கு ஒரு முக்கிய மையமாக இருந்து வந்தது.


ஆண்டுதோறும் 25,000 பேர் வரையில் இந்நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்றும், மசூதியைச் சுற்றி மூன்று முறை அவர்கள் வலம் வருவார்கள் என்றும் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பிபிசிக்குத் தெரிவித்தார்.


வயதான பெண்மணி ஒருவர் கீழே வீழ்ந்ததால், ஏனையோர் அவருக்கு மேல் வீழ்ந்து அதனால் நெரிசல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். 40 பேர் வரையில் காயமடைந்தனர்.


ஜின்கெரெபர் டிம்பக்டுவில் மிகவும் பெரிய மசூதி ஆகும்.


முன்னர் மிகவும் செழுமை மிக்கதாக இருந்த இந்நகரம் மேற்கு ஆப்பிரிக்காவில் இசுலாமைப் பரப்ப ஒரு மையமாக இருந்தது.


16ம் நூற்றாண்டின் பின்னர் இவ்வட்டாரத்தின் முக்கிய வணிக வழி சகாரா பாலைவனத்தை விட்டு, அத்திலாந்திக் பெருங்கடலுக்கு மாறியதில், மாலியின் முக்கியத்துவம் குறைந்து போனது.

மூலம்