உள்ளடக்கத்துக்குச் செல்

மாலி அரசுத்தலைவர் பதவி விலகினார், இராணுவக் கிளர்ச்சியாளர்களுடன் உடன்பாடு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஏப்பிரல் 9, 2012

மேற்காப்பிரிக்க நாடான மாலியில் இராணுவப் புரட்சியை அடுத்து ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவக் கிளர்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து அந்நாட்டின் அரசுத்தலைவர் அமடோ தவுரே தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.


இவரது பதவி விலகைலை புர்க்கினா ஃபாசோவின் வெளியுறவுத்துறை அமைச்சரும் மாலிக்கான பன்னாட்டு அமைதித் தூதருமான ஜிப்ரில் பசோல் உறுதிப்படுத்தியுள்ளார். அமைதி உடன்பாட்டின் படி இராணுவப் புரட்சித் தலைவர்கள் ஆட்சியை நாடாளுமன்ற அவைத்தலைவருக்குக் கையளிப்பர். அவைத்தலைவர் புதிய இடைக்கால அரசு ஒன்றை அமைப்பார், பின்னர் 40 நாட்களுக்குள் தேர்தலுக்கான தேதியை அவர் அறிவிப்பார்.


மார்ச் இறுதியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, நாட்டின் வடக்கே துவாரெக் போராளிகள் வடக்கின் பல பகுதிகளைக் கைப்பற்றி அங்கு தனிநாட்டையும் பிரகடனப்படுத்தியிருந்தனர். இதனை அடுத்து மாலி இராணுவப் புரட்சியாளருக்கு வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக எக்கோவாஸ் என்ற மேற்காப்பிரிக்க நாடுகள் அமைப்பிடம் இருந்து பெரும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது.


எக்கோவாஸ் சார்பாக புர்க்கினா ஃபாசோ அமைச்சர் ஜிப்ரில் பசோல் மாலி அரசுத்தலைவர் தவுரேயை மாலியின் தலைநகர் பமாக்கோவில் சந்தித்தார். புதிய உடன்படிக்கையை அடுத்து மாலி மீதான பொருளாதாரத் தடை விலக்கப்படுவதாக எக்கோவாஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இராணுவப் புரட்சியாளர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் அவ்வமைப்பு கூறியுள்ளது.


துவாரெக் போராளிகள் தமது புதிய நாட்டுக்கு அசவாத் எனப் பெயரிட்டுள்ளனர். ஆனாலும், பன்னாட்டு சமூகம் எதுவும் இதனை அங்கீகரிக்கவில்லை.


மூலம்

[தொகு]