உள்ளடக்கத்துக்குச் செல்

மாலி இராணுவம் முக்கிய நகரம் ஒன்றை இசுலாமியப் போராளிகளிடம் இருந்து கைப்பற்றியது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், சனவரி 10, 2013

மாலியின் இராணுவத்தினர் டுவென்ட்சா என்ற முக்கிய மத்திய நகரத்தை இசுலாமியப் போராளிகளிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது.


கடந்த ஆண்டு மத்தியில் நாட்டின் வடக்குப் பகுதியை போராளிகள் கைப்பற்றியதை அடுத்து இராணுவம் திருப்பித் தாக்கியது இதுவே முதல் முறையாகும். கோனா என்ற நகரின் மீதும் இராணுவம் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.


இசுலாமியப் போராளிகளிகளுடனான போருக்கு நேட்டோ தனது படைகளை அங்ஃப்கு அனுப்ப வேண்டும் என ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் தொமசு போனி யாயி கடந்த செவ்வாயன்று கூறியிருந்தார். ஆப்கானித்தானில் தாலிபான்களுடனான போரைப் போன்றே மாலியிலும் உலக நாடுகள் தலையிட வேண்டும் என அவர் கூறினார்.


மாலிக்கு 3,000 மேற்காப்பிரிக்கப் படையினரை அனுப்ப ஐநா பாதுகாப்புப் பேரவை கடந்த மாதம் அனுமதி அளித்திருந்தது. ஆனாலும், இவ்வாண்டு செப்டம்பரிலேயே அவர்கள் அங்கு அனுப்பப்படுவார்கள் என ஐநா அதிகாரிகள் தெரிவித்தனர்.


முஜாவோ, அன்சார் தைன் ஆகிய இசுலாமியக் குழுக்கள் கடந்த ஏப்ரல் மாததில் இருந்து மாலியின் வடக்குப் பகுதியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். துவாரெக் போராளிகளுடன் இவர்கள் கூட்டுச் சேர்ந்து போரிட்டனர். ஆனாலும், இக்கூட்டு நீண்ட காலம் நீடிக்கவில்லை.


இசுலாமியத் தீவிரவாதிகள் மீது போர்க்குற்றம், மற்றும் இசுலாமிய சரியா சட்டத்தை அமுல் படுத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. வரலாற்றுச் சிறப்பு மிக்க திம்பக்து நகரத்தில் அமைந்திருந்த நூற்றாண்டுகள் பழமையான சூபி மசூதிகளும் கல்லறைகளும் போராளிகளால் அழிக்கப்பட்டன.


மூலம்

[தொகு]