மாலி சர்ச்சை: பிரெஞ்சுப் படையினர் போராளிகள் வசமுள்ள கிடால் நகரினுள் நுழைந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சனவரி 30, 2013

இசுலாமியப் போராளிகள் வசமுள்ள முக்கிய நகரான மாலியின் வடக்குப் பகுதியில் உள்ள கிடால் நகரினுள் தாம் நுழைந்துள்ளதாக பிரெஞ்சுப் படையினர் அறிவித்துள்ளனர்.


கிடால் விமான நிலையத்தை பிரெஞ்சுப் படையினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து அங்கு பல விமானங்களும் உலங்கு வானூர்திகளும் இரவிரவாகத் தரையிறக்கப்பட்டன. இசுலாமியப் போராளிகள் நகரை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்றிரவு 9:30 மணியளவில் விமான நிலையத்தைக் கைப்பற்றிய படையினர் பின்னர் நகரினுள் நுழைந்ததாக கிடால் நகரப் பிராந்தியப் பேரவையின் இடைக்காலத் தலைவர் அமினி மைகா தெரிவித்தார்.


முன்னதாக பிரெஞ்சு மற்றும் மாலிப் படையினர் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காவோ, திம்பக்து நகரங்களை எவ்வித எதிர்ப்புகளும் இன்றிக் கைப்பற்றினர். மாலியின் முன்னாள் காலனித்துவ அரசான பிரான்சு இம்மாத ஆரம்பத்தில் மாலியின் வடக்கே இசுலாமியப் போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தது.


ஆனாலும், அன்சார் தைன் என்ற இசுலாமியத் தீவிரவாத இயக்கத்தில் இருந்து அண்மையில் பிரிந்த அசவாத் இசுலாமிய இயக்கம் (IMA) கிடால் நகர் தமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அறிவித்துள்ளது. அதே வேளையில், அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கமும் கிடால் தமது கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் கூறுகிறது. கடந்த சனிக்கிழமை தாம் நகரினுள் நுழைந்துள்ளதாகவும், இசுலாமியப் போராளிகள் அங்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அல்-கைதாவுடன் தொடர்புள்ள அன்சார் தைன் இயக்கத்தின் தலைவர் இயாத் அக் காலி கிடாலின் வடக்கே மலைப்பகுதிக்குள் சென்று விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அசவாத் இசுலாமிய இயக்கம் தாம் தற்போது பிரெஞ்சுப் படையினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருப்பதாக அறிவித்துள்ளது. தீவிரவாதத்தையும், பயங்கரவாதத்தையும் தாம் நிராகரித்து விட்டதாகவும், அமைதியான உடன்பாட்டுக்கு வரவே தாம் விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கமும் (MNLA) இவ்வாறே அறிவித்துள்ளது. ஆனாலும், மாலியின் இராணுவத்தினரைத் தாம் திரும்புவதற்கு அனுமதியோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர். மக்களுக்கு எதிரான பல குற்றச் செயல்களை அவர்கள் புரிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த ஆண்டு மார்ச்சு மாதத்தில் மாலியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய இசுலாமியப் போராளிகள் ஆலியின் வடக்குப் பகுதியை மாலி இராணுவத்தினரிடம் இருந்து மிக இலகுவாகக் கைப்பற்றிக் கொண்டனர். தாம் கைப்பற்றிய பகுதிகளில் இசுலாமிய சரியா சட்டத்தை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தினர்.


மாலியின் தலைநகர் பமாக்கோவில் இருந்து வடகிழக்கே 1,500 கிமீ தூரத்தில் கிடால் நகரம் அமைந்துள்ளது.


மூலம்[தொகு]