உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னாள் கெரில்லா தலைவர் உருகுவேயின் ஜனாதிபதியாகத் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், திசம்பர் 2, 2009

தென்னமெரிக்க நாடான உருகுவேயில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் கெரில்லா இயக்கத் தலைவர் ஒசே முகிக்கா வெற்றிபெற்றார். சென்ற ஞாயிறன்று உருகுவேயில் ஜனாதிபதி தேர்தல் நடந்தது. முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் லாகலே, முன்னாள் கெரில்லாத் தலைவர் ஒசே முகிக்கா ஆகியோரிடையே கடும் போட்டி நிலவின.


உருகுவேயில் 2.6 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். குறிப்பிடத்தக்க வன்முறைகள் எதுவும் இடம்பெறவில்லை. ஆரம்பத்தில் 47.5 வீத வாக்குகளைப் பெற்று முகிக்கா முன்னிலையிலிருந்தார்.


பின்னர் ஏனைய வாக்களிப்பு நிலையங்களில் எண்ணப்பட்ட வாக்குகளின் முடிவுகள் 51 வீதத்தால் முகிக்கா வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் லாகலே 45வீத வாக்குகளைப் பெற்றார். புதிய ஜனாதிபதியாக முகிக்கா 2010 மார்ச் 1 இல் பதவியேற்கவுள்ளார்.


இவர் 2005 முதல் 2008 வரை அமைச்சராக இருந்தவர், தற்போது மேலவை உறுப்பினராக இருக்கிறார்.


முகிக்கா "டுப்பமாரொசு" என்ற பொதுவுடமைக் கட்சியில் இணைந்து 1960களிலும் 70களிலும் ஆட்சியிலிருந்த இராணுவ ஆட்சிக்கு எதிராக கெரில்லா போரில் பங்கு கொண்டார். இவர் பின்னர் 1972 ஆம் ஆண்டில் சிறைப்பிடிக்கப்பட்டார். 1973 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து 14 ஆண்டுகள் இராணுவச்சிறையில் அடைக்கப்பட்டார். கடுமையான சூழ்நிலைகளில் அடிக்கடி தடுத்து வைக்கப்பட்ட முகிக்கா கிணற்றுக்கு அடியிலும் இரு ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டார்.


1985 மக்களாட்சி ஏற்பட்டவுடன், பொது மன்னிப்பின் கீழ் முகிக்கா விடுதலை ஆனார். முகிக்கா பின்னர் டுப்பமாரொசின் ஏனைய உறுப்பினர்களுடன் சேர்ந்து புதிய கட்சியொன்றை ஏற்படுத்தி "அகண்ட முன்னணி" என்ற கூட்டமைப்பில் இணைந்தார். 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் இவரது கட்சி பெரும் வெற்றி பெற்றது.

மூலம்

[தொகு]