கால்பந்து 2010: இறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து அணி தகுதி பெற்றது
புதன், சூலை 7, 2010
- 14 சூலை 2014: 2014 உலகக்கோப்பை காற்பந்து: செருமனி நான்காவது தடவையாக உலகக்கோப்பையை வென்றது
- 9 சூலை 2014: 2014 கால்பந்து உலகக்கிண்ணம்: பிரேசில் அரையிறுதியில் செருமனியிடம் 1:7 கணக்கில் தோற்றது
- 29 சூன் 2014: உலகக்கோப்பை கால்பந்து, 2014: அல்ஜீரியா முதற்தடவையாக இரண்டாம் சுற்றுக்குத் தெரிவானது
- 14 சூன் 2014: 2014 உலகக்கிண்ணக் கால்பந்து: நெதர்லாந்திடம் நடப்பு உலக வாகையர் எசுப்பானியா தோல்வி
- 13 சூன் 2014: 2014 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டி பிரேசிலில் ஆரம்பமானது
தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்றுவரும் 2010 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் நேற்றிரவு நடந்த அரையிறுதிப் போட்டி ஒன்றில் உருகுவே அணியை நெதர்லாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
உருகுவே நட்சத்திர வீரர் சாரஸ் காலிறுதிப் போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதால் இந்தப் போட்டியில் அவர் விளையாடவில்லை. ஆட்டத்தின் 18ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணி தலைவர் ஜியோவானி வான் புரோன்காஸ்ட் ஒரு கோல் அடித்து அந்த அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். மைதானத்தின் இடது பக்கத்தில் இருந்து இடது காலால் அடிக்கப்பட்ட பந்து 30 அடி தொலைவை மிக வேகத்தில் கடந்து கோல்கம்பத்துக்குள் புகுந்தது. இந்த உலகக்கோப்பைத் தொடரில் புரோன்காஸ்ட் அடித்த முதல் கோல் இதுதான்.
ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார் உருகுவே தலைவர் போர்லான். சுமார் 25 அடி தொலைவில் இருந்து இவரால் உதைக்கப்பட்ட பந்து ஜபுலானி நெதர்லாந்து கோல்கீப்பர் கைக்குள் சிக்காமல் வளைந்து சென்று வலைக்குள் வீழ்ந்தது.
70ஆவது நிமிடத்தில் ஸ்னைடர் நெதர்லாந்துக்கான 2ஆவது கோலை அடித்தார். அடுத்த 3ஆவது நிமிடத்தில் ஆர்ஜான் ராபன் 3ஆவது கோலை அடித்தார். டர்த் குயித் கொடுத்த பந்தை தலையால் முட்டி ராபன் கோலாக மாற்றினார். இதனால் நெதர்லாந்து 3-1 என்று முன்னிலை பெற்றது.
இறுதியில் 92ஆவது நிமிடத்தில் உருகுவே வீரர் பெரைரா ஒரு கோல் அடித்தார். அதோடு ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
1978 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நெதர்லாந்து அணி இறுதியாட்டத்தில் விளையாடப்போவது இதுவே முதற் தடவையாகும்.
மற்றொரு அரையிறுதிப் போட்டி ஜெர்மனி - ஸ்பெயின் அணிகளுக்கிடையே இன்று இடம்பெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஜூலை 11 இல் இடம்பெறும் இறுதிப் போட்டியில் நெதர்லாந்தை எதிர்த்து ஆடும்.
மூலம்
[தொகு]- Uruguay 2-3 Netherlands, பிபிசி, ஜூலை 6, 2010
- இறுதி போட்டிக்கு நெதர்லாந்து தகுதி, லங்காசிறி, ஜூலை 7, 2010