உள்ளடக்கத்துக்குச் செல்

யொகான்னசு கெப்லர் விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 25, 2011

ஐரோப்பாவின் அதிநவீன சரக்கு விண்கலம், யொகான்னசு கெப்லர், பன்னாட்டு விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது.


யொகான்னசு கெப்லரின் மாதிரி வடிவம்

ஆளற்ற இந்த முழுமையான தானியங்கி விண்கலம் விண்வெளி நிலையத்தின் சுவெஸ்தா என்ற கலத்துடன் நேற்று வியாழக்கிழமை 1559 ஜிஎம்டி மணிக்கு இணைந்தது. இது விண்வெளி நிலையத்தின் விண்வெளி வீரர்களுக்கு எரிபொருள், உணவு, காற்று, மற்றும் தேவையான உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு சென்றுள்ளது.


பிரெஞ்சு கயானாவில் இருந்து எட்டு நாட்களுக்கு முன்னர் பெப்ரவரி 16 இல் புறப்பட்ட இவ்விண்கலம் அரை மில்லியன் கிலோமீட்டர் தூரம் சென்று விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. இத்தாலிய விண்வெளிவீரர் பவோலோ நெஸ்போலி, மற்றும் உருசிய வீரர் அலெக்சாந்தர் கலேரி ஆகியோர் சுவெஸ்தா கலத்தினுள் இருந்து இந்த இணைப்பைப் பார்வையிட்டனர்.


நேற்று அமெரிக்காவினால் விண்ணுக்கு அனுப்பப்படவிருந்த டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்படுவதற்கு இந்த கெப்லர் விண்கலத்தின் இணைப்பு அவசியமானதாக இருந்தது. கெப்லரின் வெற்றிகரமான இணைப்பு உறுதி செய்யப்பட்டவுடன் டிஸ்கவரி நேற்று ஆறு விண்வெளி வீரர்களுடனும், உயர் தொழில்நுட்ப எந்திரன் ஒன்றுடனும் புளோரிடாவில் இருந்து ஏவப்பட்டது.


யொகான்னசு கெப்லர் என்ற சரக்குக் கப்பல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் Automated Transfer Vehicle (ATV) என்ற வகையில் இரண்டாவது தானியங்கிக் கப்பலாகும். ஜூல்ஸ் வேர்ன் என்ற முதலாவது விண்கப்பல் 2008 ஆம் ஆண்டில் தனது திட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டது.


விண்வெளி நிலையம் தற்போது பூமியில் இருந்து 350 கிமீ உயரத்தில் நிலை கொண்டுள்ளது. இந்த உயரத்தை மேலும் அதிகரிக்கச் செய்வது கெப்லரின் முக்கிய பணியாக இருக்கும். காலப்போக்கில் விண்வெளி நிலையம் பூமியில் விழும் சாத்தியக்கூறுகள் உள்ளது. விண்வெளி நிலையத்தின் தளத்தின் வேகத்தை அதிகரிக்க கெப்லர் கப்பல் சில வாரங்களுக்கு ஒரு முறை தனது அமுக்கியை உந்தச் செய்யும்.


கெப்லர் சூன் மாதமளவில் பூமிக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அது விண்வெளி நிலையத்தில் உள்ள கழிவுகளைச் சேகரித்து வந்து பூமியில் அவற்றைத் தானியங்கியாக எரித்து பசிபிக் பெருங்கடலில் வீசும்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]