உள்ளடக்கத்துக்குச் செல்

ரஜினிகாந்தின் 'எந்திரன்' திரைப்படம் உலகெங்கும் வெளியிடப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 4, 2010


இந்தியாவிலேயே அதிக பணச்செலவுடன் தயாரிக்கப்பட்ட திரைப்படம் அக்டோபர் 1 வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டது. சுப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்தின் தமிழ்த் திரைப்படம் எந்திரன் இந்திய ரூபாய் 1.6 பில்லியன் ($35 மில்லியன்) செலவில் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.


படிமம்:Enthiran 2.jpg
பெரு மச்சு பிக்ச்சுவில் எந்திரன் திரைப்படக் காட்சி
எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் வெள்ளியன்று வெளியிடப்பட்ட எந்திரன் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக முதல் நாள் இரவு முதலே திரையரங்குகளில் ரசிகர்கள் வரிசையில் காத்திருந்ததாக பிபிசி செய்தியாலர் தெரிவிக்கிறார். இத்திரைப்படம் வசூலில் புதிய சாதனையைப் பெறும் என அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


எந்திரன் திரைப்படத்தில் ரஜினிகாந்தும் (60 வயது) பாலிவுட் பிரபல நடிகை ஐசுவர்யா ராய் ஆகியோர் நடிக்கின்றனர். பாடல்களை ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார்.


அறிவியல் புனைவு படமான எந்திரன் உலகெங்கும் ஏறத்தாழ 2,000 திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இத்திரைப்படம் இந்தியிலும், தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் திரையிடப்பட்டது.


கடந்த சில ஆண்டுகளாக இத்திரைப்படத்திற்கு பெருத்த எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஹாலிவுட் திரைப்படங்களான டெர்மினேட்டர், கொட்சில்லா போன்ற திரைப்படங்களுடன் ஒப்பிடக்கூடிய அளவு தொழில்நுட்பங்களை இது கொண்டுள்லது என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏனைய இந்தியத் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்கு இதன் தொழிநுட்பம் இருப்பதாக இப்படத்தைப் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.


வசீகரன் என்கிற அறிவியலாளர் 10 ஆண்டுகாலமாக அயராது உழைத்து 'சிட்டி'என்கிற ஒரு தானியங்கியை (ரோபோ) வடிவமைக்கிறார். அதனைப் பல திறைமைகளோடு உருவாக்கி இராணுவத்தில் அதனைப் பணிபுரிய வைப்பதே அவரது குறிக்கோள். சிட்டிக்கு பல திறமைகள் இருந்தாலும், அதற்கு உணர்ச்சிகள் இல்லை என்ற காரணத்தினால், அதனைத் தவறாகப் பயன்படுத்தி கேடு விளைவிக்க வாய்ப்பு உள்ளதென்று அதற்கு அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. சிட்டிக்கு உணர்ச்சிகள் இருந்தால் மட்டுமே மனித குலத்திற்கு பயன்படுத்த முடியும் என்று நம்பும் வசீகரன், சிட்டிக்கு உணர்ச்சிகளை செலுத்துகிறார். அதனால் ஏற்படும் விளைவுகளை படம் விளக்குகிறது.


துபாய், சிட்னி, மெல்பேர்ன் போன்ற உலக நகரங்களில் செப்டம்பர் 30 வியாழக்கிழமையே இப்படம் திரையிடப்பட்டது.


“குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம். படத்தின் பாடல்களுக்காகவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும். குறிப்பாக கிளிமாஞ்சாரோ கலக்கல்..." என்றார் துபாயில் முதல் நாள் திரைப்படத்தைப் பார்த்த ஒரு ரசிகர்.


"படம் என்றால் இதான். இதுக்கு மேல் ஒரு உயர்தர வர்த்தக படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை. ரஜினி - ஷங்கர் இணைந்தது அட்டகாசம். இரண்டே முக்கால் மணி நேரப் படம். எப்போது இடைவேளை வந்தது என்றே தெரியவில்லை. அதன் பிறகு, ஒன்றரை மணி நேரப் படம் போன வேகம் பிரமிக்க வைக்கிறது,” என்றார் வேறொருவர்.


வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு எந்திரன் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சத்யம் திரையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த காட்சிக்கு பலத்த பாதுகாப்புடன் வந்திருந்தார் முதல்வர். ரஜினி உள்ளிட்ட எந்திரன் குழுவினருடன் இணைந்து முதல்வர் இத்திரைப்படத்தைப் பார்த்தார்.

மூலம்