உள்ளடக்கத்துக்குச் செல்

ருவாண்டாவின் முன்னாள் அரசுத்தலைவரின் மனைவி பிரான்சில் கைது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மார்ச்சு 3, 2010

படுகொலை செய்யப்பட்ட ருவாண்டாவின் முன்னாள் அரசுத்தலைவரான ஜுவனல் ஹபியரிமானாவின் மனைவியை பிரெஞ்சு அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.


ஜுவனல் ஹபியரிமானா அவர்கள் படுகொலை செய்யப்பட்டமைதான், 16 ஆண்டுகளுக்கு முன்னர் ருவாண்டா இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு தூண்டிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.


1994 ஆம் ஆண்டு இனப்படுகொலைகளுக்கு திட்டமிட அகதா ஹப்யரிமானா உதவினார் என்று தற்போதைய ருவாண்டா அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. அவரை விசாரணை செய்ய ருவாண்டாவுக்கு அனுப்புமாறு கோரி வந்திருக்கிறது. பல ஆண்டுகளாக பிரான்சில் வாழ்ந்துவரும் திருமதி ஹபியரிமானா ருவாண்டாவின் குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகிறார்.


1994 ஆம் ஆண்டு இனப்படுகொலைகளில் 800,000 இற்கும் அதிகமான டுட்சி இனத்தவர்கள் இறந்தனர்.


ருவாண்டா விடுத்துள்ள கைது ஆணையை அடிப்படையாக வைத்து பிரெஞ்சுக் காவல்துறையினர் திருமதி ஹபியரிமானாவை பாரிசில் வைத்துக் கைது செய்தனர்.


அவரது கைதை வரவேற்றுள்ள ருவாண்டாவின் நீதி அமைச்சர், ஆனால், அவர் ருவாண்டாவிடம் கையளிக்கப்படுவாரா என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.


பிரெஞ்சு அரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசி சென்ற வாரம் ருவாண்டா தலைநகர் கிகாலிக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்ட சில நாட்களில் இவரது கைது இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸ் மற்றும் வெளிநாடுகள் ருவாண்டா இனப்படுகொலைகளில் பல தவறுகளை இழைத்துள்ளது என சர்கோசி அங்கு வைத்துத் தெரிவித்திருந்தார்.

மூலம்