உள்ளடக்கத்துக்குச் செல்

ருவாண்டா போராளிக் குழுத் தலைவர் பிரான்சில் கைது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 12, 2010

"ருவாண்டா விடுதலைக்கான மக்களாட்சிப் படைகள்" (FDLR) என்ற போராளிக்குழுவின் தலைவர் உம்பருசிமானா என்பவர் போர்க்குற்றங்களுக்காக பிரான்சில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.


கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் (டி.ஆர். கொங்கோ) நீண்டகால இனப்பிரச்சினையின் போது கொலைகள், பாலியல் குற்றங்கள், உட்பட மொத்தம் 11 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை இவர்மீது சுமத்தப்பட்டுள்ளது.


தாம் எவ்விதக் குற்றங்களையும் இழைக்கவில்லை என்றும், தமது போராளிகள் பொதுமக்கள் மீது தாக்குதல்கள் எதையும் நடத்துவதில்லை என்றும் தமது செய்தியாளரிடம் இவர் சென்ற ஆண்டு தெரிவித்திருந்ததாக பிபிசி கூறியுள்ளது.


டிஆர் கொங்கோவில் போராளிகள் அண்மையில் நூற்றுக்கணக்கானோரைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.


1994 ருவாண்டா தூத்சி இனப்படுகொலைகளிலும் "ருவாண்டா விடுதலைக்கான மக்களாட்சிப் படையினரின் சில தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ருவாண்டாவில் தூத்சி இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட குழு ஆட்சியைக் கைப்பற்றியதும் இவர்கள் அயலில் உள்ள கொங்கோ மக்களாட்சிக் குடியரசிற்குள் தப்பி ஓடியதை அடுத்து கொங்கோவில் நீண்டகாலம் சுமுகநிலை பாதிக்கப்பட்டிருந்தது.


ஊட்டு இனப் போராளிகள் கொங்கோவைத் தமது தளமாகப் பாவிப்பதை நிறுத்துவதற்காக ருவாண்டா தனது படையினரை அங்கு இரு தடவைகள் அனுப்பியிருந்தது. இதனையடுத்து அங்கு இடம்பெற்ற வன்முறைகளில் 5 மில்லியன் பேர் வரை கொல்லப்பட்டனர்.


மூலம்