உள்ளடக்கத்துக்குச் செல்

ரொசெட்டா விண்கலம் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூன் 10, 2011

2014 ஆம் ஆண்டில் வால்வெள்ளி ஒன்றில் இறங்குவதற்காக அனுப்பப்பட்ட ஐரோப்பாவின் ரொசெட்டா விண்ணுளவி சனவரி 2014 வரை எவ்வித செயற்பாடுகளும் இன்றி உறக்கத்தில் இருக்க அதன் பூமியில் உள்ள கட்டுப்பாட்டாளர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.


ரொசெட்டா விண்கலம்
67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ வால்வெள்ளி

ரொசெட்டா விண்கலத்தை ஆழ் தூக்கத்துக்குக் கொண்டு செல்லுவதற்கான கட்டளை செருமனியில் இருந்து கடந்த புதன்கிழமை அன்று அனுப்பப்பட்டது. இவ்விண்கலத்தின் சூடாக்கிகளும், எச்சரிப்பு மணிக்கூடு ஒன்றும் மட்டுமே இயங்குகின்றன. சூரியனில் இருந்து மிக நீண்டளவு தூரத்தில் இது தற்போது நிலை கொண்டுள்ளமையால், இதன் சூரியக் கலங்கள் மிகவும் குறைந்தளவு சூரிய ஆற்றலைக் கொண்டுள்ளது. இதனால் விண்கலத்தை முழுமையாக இயக்குவதற்குத் தேவையான மின்சாரம் போதாமையாக இருப்பதால் அதனைத் தூக்கத்தில் வைப்பதற்கு அதன் கட்டுப்பாட்டாளர்கள் முடிவெடுத்தனர். ரொசெட்டா விண்கலம் தற்போது பூமியில் இருந்து 549 மில்லியன் கிமீ தூரத்தில் உள்ளது. பூமியில் இருந்து கட்டளை அங்கு போச் சேர 30 நிமிடங்கள் பிடித்துள்ளது. கட்டளை சென்றடைந்த சில நிமிட நேரங்களில் அது தூங்க ஆரம்பித்தது.


ஆத்திரேலியாவின் தலைநகர் கான்பராவில் உள்ள நாசாவின் டீப் ஸ்பேஸ் நிலையத்தினூடாக கட்டளை அனுப்பப்பட்டது. ஆத்திரேலியாவின் நியூ நோர்சியா என்ற இடத்தில் உள்ள ஈசாவின் விண்வெளி நிலையம் ஒன்றில் இருந்து ரொசெட்டாவின் தூங்கிய நிலை நடவடிக்கைகள் அவதானிக்கப்படவிருக்கிறது.


அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு இவ்விண்கலத்தில் இருந்து எவ்வித செய்திகளும் பூமிக்கு அனுப்பப்பட மாட்டாது. இது மீண்டும் 2014 ஆம் ஆண்டு சனவரி 20 ஆம் நாள் விழித்துக் கொள்ளும்.


இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில், இது தூங்கி எழுந்த சில மாதங்களில் வியாழன் கோளுக்கு அண்மையில் இது 67பி/சுரியூமொவ்-கெராசிமென்கோ என்ற வால்வெள்ளியை சந்திப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.


பனிக்கட்டியும், தூசுகளும் நிரைந்த 4கிமீ அகலமுள்ள இந்த வால்வெள்ளியை ரொசெட்டா விண்கலம் சுற்றி வந்து வால்வெள்ளியின் தரை மீது ஒரு சிறு தளவுளவியைக் கீழிறக்கும்.


"ரொசெட்டா இப்போது ஓய்வெடுத்துக் கொண்டாலும், இதன் திட்டப்பணியாளர்களுக்கு இனி வரும் மாதங்கள் மிகவும் சுறுசுறுப்பான காலம் ஆகும். வால்வெள்ளியை சந்திப்பதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்," ஐரோப்பிய விண்வெளி மையம் ஈசாவின் ரோசெட்டா திட்டப் பணிப்பாளர் ஜெரார்ட் சுவெம் தெரிவித்தார்.


ரொசெட்டா விண்கலம் 2004 ஆம் ஆண்டு மார்ச் 2 இல் விண்ணுக்கு ஏவப்பட்டது. 2014 நடுப்பகுதியில் இது குறித்த வால்வெள்ளியை அணுகும். 2014 நவம்பரில் வால்வெள்ளியின் தரையில் ஒரு தளவுளவியை இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மூலம்

[தொகு]