உள்ளடக்கத்துக்குச் செல்

லாவோசில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 49 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், அக்டோபர் 17, 2013

தென்கிழக்காசிய நாடான லாவோசின் தெற்கே மேக்கொங் ஆற்றில் நேற்று பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 49 பேரும் கொல்லப்பட்டனர். மோசமான காலநிலையே இவ்விபத்திற்குக் காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


லாவோசு ஏர்லைன்சின் ஏடிஆர் 72 ரக விமானம்

தலைநகர் வியந்தியானில் இருந்து புறப்பட்ட லாவோஸ் ஏர்லைன்சைச் சேர்ந்த ஏடிஆர் 72-600 ரக இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட விமானம் பாக்சி நகரில் தரையிறங்கும் போதே மேக்கொங் ஆற்றில் வீழ்ந்தது. விமானத்தி 44 பயணிகளும், ஐந்து பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில் 17 பேர் லாவோசு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், ஏனையோர் பிரான்சு, ஆத்திரேலியா, தாய்லாந்து, வியட்நாம், கனடா, சீனா, மலேசியா, தாய்வான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை ஆறு பேரின் உடல்களே மீட்கப்பட்டுள்ளன.


இவ்விமானம் இவ்வாண்டு மார்ச் மாதத்திலேயே சேவைக்கு விடப்பட்டதாக ஏடிஆர் நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்து பற்றிய முழுமையான விசாரணைக்கு தாம் ஒத்துழைப்போம் என இந்நிறுவனம் கூறியுள்ளது.


ஆத்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சு தமது நாட்டவர் ஆறு பேர் இவ்விமானத்தில் சென்றதாக உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவர்.


லாவோசிற்கு செல்லும் உல்லாசப் பயணிகள் பெரும்பாலும் வியெந்தியான் தலைநகர் - பாக்சி விமானப் பயணத்தில் கூடுதலாக ஈடுபடுவார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மூலம்

[தொகு]