லாவோஸ் தலைவரின் உடலை இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய அமெரிக்கா மறுப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 6, 2011

கடந்த மாதம் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் காலமான லாவோசின் உமொங் இனத் தலைவரான வாங் பாவோ என்பவரின் உடலை இராணுவ மரியாதையுடன் ஆர்லிங்டன் தேசிய இடுகாட்டில் புதைப்பதற்கு அமெரிக்க இராணுவம் மறுத்துள்ளது.


ஜெனரல் வாங் பாவோ வியட்நாம் போரின் போது லாவோசில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ இன் உதவியுடன் 15 ஆண்டுகள் போரை நடத்தி வந்தவர். கடைசியில் போர் தோல்வியில் முடிவடையவே பல்லாயிரக்கணக்கான லோவோஸ் மக்களுடன் இவர் நட்டை விட்டு வெளியேறினார்.


அமெரிக்க இராணுவத்தினரின் முடிவுக்கு எதிராகத் தாம் வெள்ளி மாளிகைக்கு மேன்முறையீடு செய்யவிருப்பதாக வாங் பாவோவின் நண்பர்கள் கூறியிருக்கின்றனர்.


"இவர் உமொங் மக்களுக்கு மட்டுமல்ல, ஆனால் வியட்நாமில் பணியாற்றிய ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனுக்கும் அவர் ஒரு வீரர் ஆவார்,” என அமெரிக்க காங்கிரசைச் சேர்ந்த ஜிம் கொஸ்டா தெரிவித்தார்.


கலிபோர்னியாவின் பிரெஸ்னோ நகரில் தனது 81வது வயதில் வாங் பாவோ காலமானார். இந்நகரிலேயே பெரும்பாலான லாவோசிய உமொம்க் மக்கள் வசிக்கின்றனர்.


1960கள் மற்றும் 70களில் அமெரிக்காவின் உதவியுடன் கெரில்லாப் போருக்கு வாங் பாவோ தலைமை வகித்தார். இளம் வயதில் இவர் யப்பானியப் படையினருக்கு எதிராக இரண்டாம் உலகப் போரில் போர் புரிந்தார். 1950களில் வடக்கு வியட்நாமியர்களுக்கு எதிராக பிரெஞ்சு இராணுவத்தினருடன் இணைந்து போர் புரிந்தார்.


அமெரிக்காவுடன் இணைந்திருந்ததால் இவரால் தம் இனத்தவரில் பலர் உயிரிழக்க இவர் காரணமாக இருந்தார் என இவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன. இதனை அவரும் உணர்ந்திருந்தார். பிற்காலத்தில் லாவோசில் புதிய கிளர்ச்சிக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மீது சுமத்தப்பட்டது.


மூலம்[தொகு]