லீ குவான் யூ சிங்கப்பூர் அமைச்சரவையில் இருந்து விலகினார்
- 16 திசம்பர் 2015: பிஎசுஎல்வி ஏவுகலம் சிங்கப்பூரின் 6 செயற்கைக் கோள்களை ஏவியது
- 23 மார்ச்சு 2015: சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ நுரையீரல் அழற்சி காரணமாக இறந்தார்
- 18 திசம்பர் 2013: லிட்டில் இந்தியா கலவரத்தில் ஈடுபட்ட 53 பேரை சிங்கப்பூர் நாடுகடத்துகிறது
- 9 திசம்பர் 2013: சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கலவரம், ஒருவர் உயிரிழப்பு
- 20 சூன் 2013: இந்தோனேசியக் காட்டுத்தீ: சிங்கப்பூர் புகை மூட்டத்தில் மூழ்கியது
ஞாயிறு, மே 15, 2011
சிங்கப்பூரின் நிறுவனரும் முன்னாள் பிரதமரும் தற்போதைய மதியுரை அமைச்சருமான லீ குவான் யூ அமைச்சரவையில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
லீ குவான் யூவுடன் இணைந்து மூத்த அமைச்சர் கோ சோக் டோங்கும் அமைச்சரவையிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர். லீ குவான் யூவின் மகனும் தற்போதைய பிரதமருமான லீ சியன் லூங்கின் புதிய அமைச்சரவையில் இளைய, புதிய அமைச்சர்கள் இடம்பெற வழிவகுக்க தாங்கள் அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்வதாக நேற்று இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
ஆளும் மக்கள் செயல் கட்சி இம்மாதம் நடைபெற்ற தேர்தலில் 1965 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக பெரும் பின்னடைவைச் சந்தித்ததை அடுத்து லீ குவான் யூ இம்முடிவை எடுத்திருப்பதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
87 வயதான லீ கூவான் யூ 1959 ஆம் ஆண்டு முதல் 1990 வரை நாட்டின் பிரதமராக இருந்தார். அவருக்குப் பின்னர் 2004 வரை கோ சோக் டோங் பிரதமரானார். இருவரும் மே 7 இல் நடந்த தேர்தலில் தமது தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தனர்.
"புதிய அரசியல் நிலவரத்தை நாங்கள் நன்கு ஆராய்ந்துவிட்டோம். அது எதிர்காலத்தில் எந்த அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்துள்ளோம். சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கு நாங்கள் பங்காற்றி விட்டோம். அதிக சிக்கல் மிகுந்த, சிரமமான காலத்துக்குள் சிங்கப்பூரைக் கொண்டு செல்லும் இளைய தலை முறையினருக்கு வழிவிடும் நேரம் வந்துவிட்டது," என்று இரு முன்னாள் பிரதமர்களும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
அமைச்சரவையிலிருந்து விலகினாலும் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பார்கள். பிரதமர் லீ சியன் லூங்கின் பழைய அமைச்சரவையில் இருந்து இவர்கள் இருவர் தவிர, பேராசிரியர் எஸ். ஜெயக்குமார், லிம் பூன் ஹெங், ஜார்ஜ் இயோ, லிம் ஹுவி ஹுவா ஆகியோரும் பதவி விலகியுள்ளனர்.
இம்மாதம் இடம்பெற்ற தேர்தலில் ஆளும் கட்சி 60% வாக்குகளைப் பெற்றது. 2006 தேர்தலில் 67% வாக்குகளையும், 2001 தேர்தலில் 75% வாக்குகளையும் அது பெற்றிருந்தது.
மூலம்
[தொகு]- Singapore founding father Lee Kuan Yew resigns, பிபிசி, மே 14, 2011
- Lee Kuan Yew steps down, பாங்கொக் போஸ்ட், மே 15, 2011
- லீ குவான் இயூ, கோ சோக் டோங் அமைச்சரவையில் இருந்து விலகல், தமிழ்முரசு, மே 15, 2011