உள்ளடக்கத்துக்குச் செல்

வட மாகாணசபைத் தேர்தல், 2013: வன்முறைகளுக்கு நடுவில் இன்று தேர்தல்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, செப்டெம்பர் 21, 2013

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இன்று நடைபெறுகின்றது. மூன்று மாகாண சபைகளிலுமுள்ள பத்து மாவட்டங்களிலிருந்தும் இத்தேர்தலில் 142 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் இவர்களைத் தெரிவு செய்வதற்கென இன்று 43 இலட்சத்து 58 ஆயிரத்து 263 பேர் வாக்களிக்கவுள்ளனர்.


25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற் தடவையாக நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில், 7 லட்சத்து 14 ஆயிரத்து 488 வாக்காளர்கள் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றிருக்கின்றார்கள். மொத்தமாக 36 உறுப்பினர்கள் வாக்களிப்பின் மூலம் நேரடியாகவும் இரண்டு உறுப்பினர்கள் அதிகூடிய வாக்குகளைப் பெறுகின்ற ஒரு கட்சியில் இருந்தும் தெரிவு செய்யப்படுவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறைத் தேர்தலில் முக்கிய கட்சியாகப் போட்டியிடுகிறது. இன்று சனிக்கிழமை காலை வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள பின்னணியில், அச்சமும் குழப்பமும் கலந்த ஒரு சூழ்நிலையே வடமாகாணத் தேர்தல் களத்தில் காணப்படுவதாக பிபிசி செய்தியாளர் அங்கிருந்து தெரிவிக்கிறார். இராணுவத் தலையீடுகள் அதிகம் இருப்பதாக பொதுமக்களும், வேட்பாளர்களும் முறையிட்ட போதிலும், இராணுவம் இதனை மறுத்திருக்கிறது.


யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒரேயொரு பெண் வேட்பாளராகிய அனந்தி சசிதரனின் வீடு வியாழனன்று இரவு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றது. இச்சம்பவத்தின் போது அனந்தி அங்கில்லாததை அடுத்து அவரது ஆதரவாளர்கள் பலர் தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர்.


இராணுவ சீருடையில் வந்தவர்களே அனந்தியின் வீட்டைச் சுற்றி வளைத்து தாக்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலை அறிந்து அங்கு சென்ற உள்ளுர் தேர்தல் கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த சட்டத்தரணி சுபாஸ் என்பவரும் ஆயுததாரிகளால் தாக்கப்பட்டார். தான் யார் என்று அடையாளப்படுத்திய பின்னரும் அவர்கள் தம்மைத் தாக்கியதாக அவர் கூறியுள்ளார். காயமடைந்தவர்கள் 10 பேர் பாதுகாப்பாக யாழ்ப்பாண பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் இருவரின் நிலைமைகள் மோசமாக இருந்ததாகவும் முறிவு காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாகவும் யாழ் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


இத்தாக்குதலைத் தாம் நடத்தவில்லை என இலங்கை ராணுவம் மறுத்திருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கையில் இருக்கும் அமெரிக்கத் தூதரகம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இத்தாக்குதல் தொடர்பில் நீதியான வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகள் விரைவாக நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.


இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் கிளிநொச்சி அலுவலகத்தை நேற்றிரவு பதினைந்துக்கும் மேற்பட்ட இராணுவப்புலனாய்வாளர்கள் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது காரியாலயத்தில் சிறீதரன் உட்பட உட்படப் பதினைந்துக்கு மேற்பட்டவர்கள் உள்ளனர்.


மூலம்

[தொகு]