வணங்காமண் நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, ஆகத்து 23, 2009, கொழும்பு:


வன்னி மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர் தமிழர்களால் சேகரித்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன.


660 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் துறைமுகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் அடங்கியுள்ள பொருட்களின் தரம் மற்றும் பாவனைக்கு உகந்த நிலை என்பன குறித்து பரிசோதித்து ஆவணங்களை வழங்க வேண்டிய அரச நிறுவனங்கள் இன்னும் அவற்றை வழங்காததே தாமத்துக்கு காரணம் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.


கொள்கலன்கள் துறைமுகத்திலேயே கிடப்பதால் துறைமுக அதிகார சபைக்குச் செலுத்த வேண்டிய வாடகை 15 லட்சமாக உயர்ந்துவிட்டதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கான இயக்குநர் நாயகம் சுரேன் ஜே.எஸ்.பீரிஸ் தெரிவித்தார்.


கொள்கலன்களில் உள்ள பொருட்கள் பாவனைக்கு உகந்தவையாக என்பதை சுகாதார அமைச்சு, தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், அணுசக்தி அதிகார சபை ஆகியன பரிசோதித்து சான்றிதழ்களை வழங்க வேண்டும். இதுவரை அது வழங்கப்படவில்லை. எதிர்வரும் புதன்கிழமை சான்றிதழ்கள் கிடைத்துவிடும் என செஞ்சிலுவைச் சங்கம் எதிர்பார்க்கிறது.


பால் சார்ந்த பொருட்களை சோதிப்பதிலேயே தாமதம் ஏற்படுவதாக தகவல் வட்டாரங்கள் கூறின. 'கப்டன் அலி' கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட இந்தப் பொருட்களை ஏற்க முடியாது என சிறிலங்கா அரசு திருப்பி அனுப்பி இருந்தது. அதன் பின்னர் இந்தியா தலையிட்டு அந்தப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக வேறு கப்பல் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்தது.


புலம்பெயர் தமிழர்களின் பொருட்கள் இடம்பெயர்ந்த பின் வன்னியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சென்று சேரக்கூடாது என்ற அரசின் பிடிவாதத்தின் காரணமாகவே பொருட்களை துறைமுகத்தை விட்டு நகர்த்துவதற்கான அனுமதி தாமதப்படுத்தப்படுகின்றது என தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


மொத்தத்தில் முடிந்தவரைக்கும் காலத்தை இழுத்தடித்து பின்னர் பாவனைக்கு உதவாத பொருட்கள் என்று கூறி அவற்றை கடலில் கொட்டிவிடுவதற்கே சிறிலங்கா அரசு திட்டமிடுகின்றது எனவும் தமிழர் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்படுகின்றது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]