வன்னிப் போர்க்கள மருத்துவர் தேர்தலில் போட்டி

விக்கிசெய்தி இலிருந்து

புதன், ஏப்பிரல் 7, 2010

இலங்கையில் சென்ற ஆண்டு வன்னியில் இடம்பெற்ற ஈழப்போரின் போது போர்க்களத்தில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் இவ்வாரம் இடம்பெறும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வன்னி மாவட்டத்தில் இருந்து அரசு சார்பு தமிழ்க் கட்சி ஒன்றில் இணைந்து போட்டியிடுகிறார்.


வன்னிப் போர்க்களத்தில் இருந்து அதிக உயிரிழப்புகளை பன்னாட்டு உதவியமைப்புக்களுக்கும், ஊடகங்களுக்கும் அளித்த மருத்துவர் வி. சண்முகராஜா என்பவரே ஈரோஸ் என்ற கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.


சண்முகராஜாவும் வேறு 4 மருத்துவர்களும் போர்க்களத்தில் இருந்து செய்திகளை வெளியிட்டமை இலங்கையின் பெரும்பான்மையின சிங்கள சமூகத்தினரிடையே பெரும் கோபத்தைக் கிளப்பியிருந்தது.


மோதலின் இறுதிக்கட்டத்தில் 35,400 வரையிலான பொது மக்கள் கொல்லப்பட்டதாக இந்த மருத்துவர்கள் போர்க்களத்தில் இருந்து தெரிவித்திருந்தனர். பெரும்பாலானோர் இராணுவத் தாக்குதலாலேயே இறந்தனர் என்றும் இவர்கள் தெரிவித்திருந்தனர். போர் நிறைவடைந்த பின்னர் இவர்கள் அரசுப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது முதலில் தாங்கள் கூறியதை மறுத்திருந்தனர். விடுதலைப் புலிகளின் அழுத்தத்தாலேயே முதலில் அவ்வாறு கூறியிருந்ததாகவும் இறந்தவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திச் சொல்லியிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இதனை அடுத்து சண்முகராஜா இராணுவச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் தனது பிறந்த ஊரான முல்லைத்தீவில் அரசு மருத்துவமனையில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்.


இவர் போட்டியிடும் ஈரோஸ் கட்சி ஆளும் அரசுக் கூட்டணியில் இல்லாவிட்டாலும், அக்கட்சி அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு ஆதரவளிக்கின்றது என மரு. சண்முகராஜா பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச தனது பார்வையில் “பரவாயில்லை” என அவர் தெரிவித்தார்.


முல்லைத்தீவு மக்களில் அரைவாசிக்கும் அதிகமானோர் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள அகதி முகாம்களிலேயே வாழ்கின்றனர். ஆனாலும் நிலமை படிப்படியாக வழமைக்குத் திரும்புகின்றது என சண்முகராஜா தெரிவித்தார்.


மருத்துவர்கள் மருத்துவமனை மீது ஏவுகணைத் தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை எனத் தெரிவித்திருந்தாலும், ஐக்கிய நாடுகளும் செஞ்சிலுவைச் சங்கமும் ஏவுகனைத் தாக்குதல்கள் அரசுத்தரப்பில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதை உறுதிப்படுத்தியுள்ளன. பொதுமக்கள் எவரும் தமது தாக்குதலில் கொல்லப்படவில்லை என அரசு கூறுகிறது.


”இழப்புகளின் தொகை குறித்து நான் கதைக்க விரும்பவில்லை. சர்ச்சைக்குரிய அந்தப் பகுதி முடிந்துவிட்டது,” சண்முகராஜா பிபிசிக்குத் தெரிவித்தார்.


இவர் அரசாங்கத்தின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே தோ்தலில் களமிறங்கியுள்ளதாக தமிழ் அரசியல் அவதானிகள் நோக்குகின்றனர்.


26 ஆண்டுகளாக தனி நாடு கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் சென்ற ஆண்டு மே மாதத்தில் தோற்கடிக்கப்பட்டனர்.


அரசுத்தலைவர் ராஜபக்சவின் ஆளும் கூட்டணி இவ்வாரம் வியாழக்கிழமை நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்[தொகு]